மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

மாயாவதி ஆதரவாளர்கள் 296 பேர் மீது வழக்குப்பதிவு !

மாயாவதி ஆதரவாளர்கள் 296 பேர் மீது வழக்குப்பதிவு !

அகிலேஷ் யாதவ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 296 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே உத்தரப் பிரதேச ஆளுநரிடம் இதுதொடர்பாக சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார். இதற்காக லக்னோ விமான நிலையத்துக்கு நேற்று வந்த அகிலேஷ் யாதவை சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி காவல் துறை அதிகாரிகள் விமானத்தில் ஏறவிடாமல் தடுத்து, பிரயாக்ராஜ் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர். இந்தச் சம்பவம் உபியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அகிலேஷ் யாதவ் பல்கலை கழகத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக சமாஜ் வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்ட பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது இதுதொடர்பாக பேசிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ”அலகாபாத் பல்கலைக்கழகத்துக்கு அகிலேஷ் யாதவ் சென்றால், இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையே பெரும் கலவரம் ஏற்படும். பல்கலைக் கழகம் சார்பில் கேட்டுக்கொண்டதன் காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

எனினும் லக்னோ, பிரயாக்ராஜ், ஜான்ப்பூர், ஜான்சி, கானுஜ், பால்ராம்ப்பூர், கோரக்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது, போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். 2 எம்.பி,க்கள், 46 முக்கிய பிரமுகர்கள் உட்பட சுமார் 296 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே இன்று (பிப்ரவரி 13) பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் கொண்ட குழு விமான நிலையத்தில் அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிராக ஆளுநர் ராம் நாய்க்கை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon