மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

ரஃபேல்: ராகுல் குற்றச்சாட்டை மறுக்கும் ரிலையன்ஸ்!

ரஃபேல்: ராகுல் குற்றச்சாட்டை மறுக்கும் ரிலையன்ஸ்!

ரஃபேல் விவகாரத்தில் அனில் அம்பானிக்கு இடைத்தரகரைப் போல பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளதை ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

ராகுல் குற்றச்சாட்டு

இதுகுறித்து நேற்று (பிப்ரவரி 12) டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரஃபேல் குறித்த சிஏஜி அறிக்கையில் உண்மையிருக்காது. ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு 10 நாட்களுக்கு முன்பே ஃபிரான்ஸ் அமைச்சரை அனில் அம்பானி நேரில் சந்தித்தார். பாதுகாப்பு அதிகாரிகளுக்கே தெரியாத நிலையில், மோடிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அனில் அம்பானிக்குத் தெரிந்திருக்கிறது. பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரியாத ரகசியம் அனில் அம்பானிக்கு எப்படி தெரிந்தது?

இதுதொடர்பாக ஏர்பஸ் அதிகாரி ஃபிரான்ஸ் அதிகாரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். பாதுகாப்பு ரகசியங்களை அனில் அம்பானிக்குக் கூறியதன் மூலம் பிரதமர் மோடி உளவாளி ஆகியுள்ளார். இது உண்மையென்றால் பிரதமர் நரேந்திர மோடி ரகசியக் காப்பு விதியை மீறிய வகையில் அவரை கைது செய்யலாம். ரஃபேல் ஊழலில் அனில் அம்பானிக்குத் தொடர்புள்ளது என்பதை இந்த இ-மெயில் உறுதிப்படுத்துகிறது. பிரதமர் மோடி அனில் அம்பானிக்கு இடைத்தரகர் போல செயல்பட்டுள்ளார். இந்த மின்னஞ்சல் குறித்து பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப் போகிறார்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

ரிலையன்ஸ் டிஃபென்ஸ் மறுப்பு

இந்த நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. “ராகுல் காந்தி ஆதாரமாகக் காட்டிய மின்னஞ்சல் ரஃபேல் ஒப்பந்தத்துக்கானதே கிடையாது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஏர்பஸ் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் சிவில் மற்றும் டிஃபென்ஸ் ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தம் தொடர்பாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல் அது. ரஃபேல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது ஏப்ரலில் 2015இல் அல்ல, 2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி. ஆனால், தரவுகள் வேண்டுமென்றே திரித்து வெளியிடப்படுகிறது’ என்று ரிலையன்ஸ் டிஃபென்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

ஏர்பஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் ராகுல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏர்பஸ் நிறுவனத்துக்கு ஏஜென்டாகச் செயல்படுகிறார் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் கூறுகையில், “ஏர்பஸ் நிறுவனத்துக்கும், ராகுல் காந்திக்கும் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்வது ஒன்றுதான் நோக்கம். ஏர்பஸ் நிறுவனம் மட்டும்தான் ரஃபேலை எதிர்த்துப் போட்டியிட்ட ஒரே நிறுவனம். ராகுலின் இந்தத் தாக்குதல்கள் மற்றொரு தரப்புக்குத்தான் சாதகமானது. ராகுல் காந்தி ஏர்பஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் போல செயல்படுகிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon