மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 20 நவ 2019

உயிரின் விலை 5 லட்சமா? டெல்லி அரசை விளாசிய கவுதம் கம்பீர்

உயிரின் விலை 5 லட்சமா?  டெல்லி அரசை  விளாசிய கவுதம் கம்பீர்

டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நேற்று (பிப்ரவரி 12) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் வரை இறந்துவிட்டார்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படும் நிலையில், டெல்லி ஆம் ஆத்மி அரசை இந்த விவகாரத்தில் கடுமையாக சாடியிருக்கிறார் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரும், டெல்லிவாசியுமான கவுதம் கம்பீர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடாக அளிப்பதாக டெல்லி அரசு அறிவித்தது. இதற்குப் பதில் தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருக்கும் கவுதம் கம்பீர், “அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களே... ஒவ்வொரு மனித உயிரும் நிச்சயமாக 5 லட்சம் ரூபாயை விட அதிக மதிப்பு கொண்டதுதான். அரசு இயந்திரம் மக்களைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதை இந்த இழப்பீடு அறிவிப்பு அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது. டெல்லியில் ஆழமாக வேரூன்றிப் போயுள்ள ஆக்கிரமிப்பு, விதிமீறல்கள் போன்ற புண்ணுக்கு 5 லட்சம் இழப்பீடு என்பது பேண்டெய்டு ஒட்டுவது போலத்தான். இவற்றைக் களைய நிர்வாக ரீதியான அறுவை சிகிச்சை டெல்லிக்குத் தேவைப்படுகிறது” என்று கோபமாக சொல்லியிருக்கிறார் கவுதம் கம்பீர்.

கவுதம் கம்பீர் ஃபவுண்டேஷன் என்ற தனது நிறுவனத்தின் பக்கத்தில்தான் அந்த ஹோட்டல் இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் கம்பீர், “அந்தக் கட்டடத்தில் வணிகத்துக்காக விதிமீறல்கள் எவ்வாறெல்லாம் நடந்து வருகின்றன என்பதை நான் அறிவேன்” என்றும் கூறியிருக்கிறார்.

தன் அலுவலகத்துக்கு அருகிலுள்ள ஹோட்டலில் விதிமீறல்கள் நடந்திருப்பது தெரிந்தும் இதுவரை அதை கம்பீர் சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகத்திடம் ஏன் தெரிவிக்கவில்லை என்றும் கேள்விகள் இப்போது எழ ஆரம்பித்திருக்கின்றன.

ஆனபோதும் கவுதம் கம்பீரின் கேள்விகளால் டெல்லியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே உருவாகியுள்ளது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon