மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

புனித நூல்களை அவதூறாகப் பேசவில்லை: விஜய் சேதுபதி

புனித நூல்களை அவதூறாகப் பேசவில்லை: விஜய் சேதுபதி

பகவத் கீதை குறித்து தான் கூறியதாகத் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவரும் நிலையில் சமூகக் கருத்துகளையும் அவ்வப்போது தெரிவித்துவருகிறார். அவரது கருத்துகள் பாராட்டுகளைப் பெறுவதுடன் ஒரு சாராரிடம் விமர்சனத்துக்கும் உள்ளாகிவருகிறது. அண்மையில் சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதிக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்றது. அதே நேரத்தில் விஜய் சேதுபதியை விமர்சித்தும் பதிவுகள் வந்தன.

காவல் துறையினர் செல்போன் பறிப்பு சம்பவத்தைத் தடுக்கும் விதமாக டிஜிகாப் என்ற செயலியை அறிமுகப்படுத்தினர். அது தொடர்பாக விஜய் சேதுபதி, “செல்போன் பறிப்பு சம்பவத்தால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. டிஜிகாப் செயலியால் பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்குமான இடைவெளி குறையும்” என்று பேசியிருந்தார்.

நியூஸ் 7 நிறுவனம் இந்தச் செய்தியை விஜய் சேதுபதியின் படத்துடன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தது. இதை சிலர் போட்டோஷாப் மூலம் மாற்றி, “பகவத் கீதை ஒன்றும் புனித நூல் கிடையாது. இன்றைய சீரழிவுக்கு இதுபோன்ற கற்பனையால் உருவாக்கப்பட்ட நூல்களே காரணம்” என விஜய் சேதுபதி கூறியதாகப் பரப்பியுள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “என் அன்பிற்குரிய மக்களுக்கு, பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்போதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon