மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

மக்களைச் சாமியாடவைத்த தமிழ் சினிமா - தேவிபாரதி

மக்களைச் சாமியாடவைத்த தமிழ் சினிமா - தேவிபாரதி

சினிமா பாரடைசோ – 15

நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட தமிழ் சினிமா தொடர்ந்து வாழ்வின் பல்வேறு கூறுகளை அதன் எல்லைகளுக்குள் நின்று சோதித்து வந்திருக்கிறது. அரிதான தருணங்களில் எல்லைகளைத் தாண்டிச் செல்லவும் முற்பட்டிருக்கிறது. தமிழ் வாழ்வில் செல்வாக்குச் செலுத்தி வந்த சமூக, அரசியல் கோட்பாடுகளைப் பிரதிபலித்து வந்திருக்கிறது.

சினிமா என்பது எல்லா வகைகளிலும் நவீன வாழ்வின் கலை. காலனியத்தின் நுகத்தடிக்குக் கீழே தனக்கு அறிமுகமான அந்தக் கலையைப் புரிந்துகொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளவும் முற்பட்டவர்கள் மரபு ரீதியில் புழக்கத்திலிருந்த கலை வடிவங்களோடு அதைப் பிணைக்க முற்பட்டார்கள்.

தங்களுக்கு அறிமுகமான புராணங்கள், இதிகாசங்கள், தொல்கதைகள் முதலானவற்றைப் பாட்டு, இசை, நாடகம், கூத்து முதலான நிகழ்த்துக் கலைகளின் வழியாகவும் சடங்குகளாகவும் நம்பிக்கைகளாகவும் பற்றிக்கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் அவற்றை அப்படியே தனக்குப் புதிதாக அறிமுகமான சினிமா என்ற ஆச்சரியமூட்டும் கலை வடிவத்தோடு பிணைத்தது.

பயிற்சி பெற்றிருந்த கலைஞர்களைக் கொண்டு மரபார்ந்த கலை வடிவங்களை வளர்த்தெடுப்பதற்கும் மீளுருவாக்கம் செய்வதற்கும் சினிமாவை, அதன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதுவரை தங்கள் தெய்வங்களைக் கோயில்களில் சிலைகளாகவும் ஓவியங்களாகவும் தரிசித்துவந்த மக்கள் சினிமாவின் வழியே அசையும் ஒளிப்படங்களாகக் கண்டு பரவசமடைந்தார்கள். முன்பு கூத்து நாடகம் முதலான நிகழ்த்துக் கலை வடிவங்களில் அவர்கள் பார்த்த கடவுளர்களுக்கும் சினிமாவில் பார்த்த கடவுளர்களுக்கும் பெரிய, நம்ப முடியாத வித்தியாசங்கள் இருந்தன.

தங்களுடைய கிராமங்களில், திருவிழாக்களில், அரங்கேற்றப்பட்ட நிகழ்த்துக் கலைகளில் அவர்களுக்கு நெருக்கமான, அவர்களோடு ஒரே தெருவில் வசித்து வந்த கடவுளர்களைப் போல ஒப்பனை பூண்டவர்களாக அல்லாமல் சினிமாவில் தோன்றிய கடவுளர்களை அசலானவர்களாகக் கற்பனை செய்துகொண்டார்கள். கதைகளின் வழியே அவர்கள் கேள்விப்பட்டிருந்த பனிபடர்ந்த கயிலையையும் பாற்கடலையும் அவற்றின் ஒளியோடும் பின்னணி இசையோடும் அருகிலிருந்து ‘காண’ முடிந்தது.

கடவுளர்களைப் பற்றி உடுக்கடி இசைக் கலைஞர்களும் வில்லுப்பாட்டுக்காரர்களும் சொன்ன கதைகளைத் தேர்ந்த வசனங்கள் பாடல்கள், நாட்டியங்களின் வழியாக அவர்கள் முன் காட்சிப்படுத்தியது சினிமா.

திரையில் ரத்தமும் சதையுமாகத் தோன்றிய ஈசனையும், திருமாலையும், முருகனையும், பிள்ளையாரையும், அம்மனையும் அவர்கள் வழிபட்டார்கள், திரையில் அவர்களது உருவம் தோன்றியபோது பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். சூடம் கொளுத்தினார்கள், கண்ணீர் உகுத்தார்கள், அருள்கொண்டு ஆடினார்கள், மயக்கமுற்று, திரைக்கெதிரே இருந்த மண் தரையில் விழுந்து புரண்டார்கள்.

சினிமா விதவிதமான முறைகளில் விதவிதமான ஒப்பனைகளில் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு தொடர்ந்து அவர்களைப் பரவசப்படுத்திக்கொண்டே இருந்தது. காதல், காமம், வீரம், நன்மை, தீமை, இன்பம், துன்பம், கண்ணீர், புன்னகை, போர்கள், வெற்றிகள், தோல்விகள், துறவு, பேராசை, பாவம், புண்ணியம், எழுச்சி, வீழ்ச்சி என எல்லாவற்றுக்குமான கதையாடல்கள் மகாபாரதத்திலிருந்தும் ராமாயணத்திலிருந்தும் திருவிளையாடல் புராணத்திலிருந்தும் பாகவதத்திலிருந்தும் திரைக்கதையாசிரியர்களுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தன.

சினிமா ரசனைக்குத் தேவையானவற்றைத் தம் கற்பனைகளில் உருவாக்கிக்கொள்வதற்கான இடங்கள் அவற்றில் இருந்தன. மகாபாரதத்தின் துணைக் கதைகளான அரிச்சந்திரன் கதை, நளன் சரித்திரம், தேவயானி கதை, ராவணன் கதை, சத்தியவான் சாவித்திரி, மார்க்கண்டேயனின் கதை இந்தியத் தொல்கதைகளில் ஒன்றான விக்கிரமாதித்தியன் கதை, மகாகவி காளிதாசரின் நாடகங்கள் போன்ற எண்ணற்ற கதையாடல்கள் தமிழ் சினிமாத் தயாரிப்பாளர்களைத் தொடர்ந்து ஈர்த்துக்கொண்டிருந்தன.

1930, 40களில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் 99 விழுக்காடு இவ்வகைமைகளைச் சார்ந்தவை.

எடுத்த எடுப்பிலேயே 1931ஆம் ஆண்டில் காளிதாஸ் வந்தது.

1932இல் ராமாயணம், சம்பூர்ண ஹரிச்சந்திரா.

1933இல் ஸ்ரீ கிருஷ்ண லீலா, வள்ளி திருமணம், நந்தனார், வள்ளி திருமணம்.

1934இல் வெவ்வேறு தலைப்புகளில் ஸ்ரீ கிருஷ்ணன், கோவலன், திரௌபதி வஸ்திராபரணம், பவளக்கொடி... இவற்றில் பெரும்பாலானவை கூத்து வடிவிலும் இசை நாடக வடிவிலும் தமிழ்ச் சமூகத்துக்கு நன்கு அறிமுகமானவை.

1956ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், பத்மினி நடித்து வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற மதுரை வீரன் படம் வெளிவருவதற்குப் பல வருடங்களுக்கு முன்பாகவே 1939இல் மதுரை வீரன் என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. தமிழின் தொடக்கக் காலத் திரைப்படங்களில் ஒன்று என்பதற்கு மேல் அந்தப் படத்துக்கோ அதில் நடித்த நடிகர்களுக்கோ வரலாற்றுச் சிறப்புகள் எதுவும் உருவானதாகத் தெரியவில்லை.

ஆனால் 1956இல் அதே பெயரில் வெளிவந்த படத்தில் நாயகனாக வேடமேற்றிருந்த எம்.ஜி.ஆர், அசல் மதுரை வீரனைவிட அதிகப் புகழ் பெற்றார். திரைப்படத்தின் மதுரை வீரன் தமிழ்ச் சமூகத்தின் மாவீரரானார். பிறகு முதலமைச்சராகவும் ஆனார்.

மதுரை வீரன் கதை முத்து வீரன் கதை என்னும் பெயரில் பல்லாண்டுகளாகவே இசை நாடகமாக மேடையேற்றப்பட்டுப் புகழ் பெற்றது. தலித்துகளான அருந்ததியர்களின் கடவுளாக வழிபடப்படும் மதுரை வீரன் திருவிழாக்களில் இன்று வரை மதுரை வீரன் நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. தேர்ந்த நடிகர்களைக் கொண்டு நடத்தப்பட்ட மதுரை வீரன் நாடகங்கள் அவற்றின் பார்வையாளர்களுக்குத் தரும் பரவசத்தை அந்தத் திரைப்படங்களால் தர முடிந்திருக்குமா என்பது சந்தேகமே. மறைந்த மதுரை வீரன் நாடகக் கலைஞர் கூத்தம்பட்டி திருமலையைப் போலவோ பவானி அர்ஜுனனைப் போலவோ அசாதாரணக் கலைத் திறன் கொண்ட மதுரை வீரன் கலைஞர்கள் உருவாக்கும் பரவசம் ஈடு இணையற்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

மதுரை வீரன் கதையைப் போலவே காத்தவராயன் கதையும் தமிழ்ச் சமூகத்தின் புகழ் பெற்ற வாய்மொழிக் கதைகளில் ஒன்றாக இருந்துவந்திருக்கிறது. மதுரை வீரன் கதையைப் போலவே ஒடுக்கப்பட்ட வேடுவ சமூகத்தைச் சேர்ந்த வீரன் காத்தவராயன். காத்தவராயன் நாடகமாகவும் உடுக்கடிப் பாடலாகவும் கொங்கு மண்டலக் கிராமங்களில் புகழ் பெற்றது. மதுரை வீரன் கதையைவிட அதிக கற்பனைத் திறன்களைக் கொண்ட காத்தவராயன் கதைக்குப் புரவலர்கள் இல்லாததால் நலிந்து காணாமல் போனது. ஆர்யமாலா என்ற பிராமணப் பெண்ணின் மீது காதல் கொண்டதற்காக காத்தவராயன் கழுவேற்றப்படுவான்.

1941இல் ஆர்யமாலா என்னும் பெயரில் காத்தவராயன் கதை திரைப்படமாகியிருக்கிறது. 1956இல் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி - சாவித்திரி நடிப்பில் காத்தவராயனின் கதை திரைப்படமானது. சிவாஜியின் திரைப்பட வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்படும் அந்தப் படம் எம்.ஜி.ஆரைப் போல சிவாஜிக்கு வரலாற்றில் முக்கியத்துவம் எதையும் தரவில்லை.

மதுரை வீரன், காத்தவராயன் ஆகிய இரண்டு வீரர்களின் கதைகளையுமே தமிழ்ச் சமூகத்தில் நிலவிவந்த சாதிய ஒடுக்குமுறைகளுக்கான சான்றுகளாகக் கொள்ள முடியும். பிறகு அவை வெகு தந்திரமாக சாதிய - இந்து மரபுடன் இணைக்கப்பட்டன. சின்னான் - செல்லி ஆகிய அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த தம்பதியரின் மகனான மதுரை வீரன் மன்னர் குலத்தைச் சேர்ந்தவனாக மாற்றப்பட்டுக் கடவுளாக்கப்பட்டான். ஆனால், அருந்ததியர்களின் கடவுள். காத்தவராயனின் பிறப்பு பற்றிய கதையாடல் ஆரியமயமாக்கப்பட்டது. காத்தவராயனை சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்து வேடுவர் குலத்தில் வளர்ந்தவனாகச் சித்திரித்தார்கள். காத்தவராயன் முருகனின் ஓர் அம்சமாக, இன்று வரை தமிழ் மனங்களில் நீடித்திருக்கிறான்.

மதுரை வீரன், காத்தவராயன் கதைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டியவை. இன்றைய பண்பாட்டு, அரசியல் வளர்ச்சிக்கேற்ப மறு ஆக்கம் செய்யப்பட வேண்டியவை.

கற்பனை உலகிலிருந்து வெளியேறிய தமிழ் சினிமா

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon