மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

ஸ்விகி ஸ்டோர்ஸ்: மளிகை முதல் மருந்து வரை!

ஸ்விகி ஸ்டோர்ஸ்: மளிகை முதல் மருந்து வரை!

பிரபல உணவுப் பொருட்கள் விநியோக நிறுவனமான ஸ்விகி மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் விற்பனைக்காக ஸ்விகி ஸ்டோர்ஸ் சேவையைத் தொடங்கியுள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஆன்லைன் உணவுப் பொருட்கள் விநியோக நிறுவனமான ஸ்விகி இந்திய மெட்ரோ நகரங்கள் மற்றும் இரண்டாம்கட்ட நகரங்களில் மிகவும் பிரபலமானது. ஸ்விகி தளத்துக்குச் சென்று நாம் விரும்பும் உணவகத்தில் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்தால், நாம் இருக்கும் இடத்துக்கு ஆர்டர் செய்த உணவுப் பொருளை கொண்டுவந்து சேர்க்கும். தற்போது இந்த நிறுவனம் மளிகைப் பொருட்கள் முதல் மருந்துகள் வரை அனைத்தையும் ஸ்விகி ஸ்டோர்ஸ் என்ற செயலி வழியாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஸ்விகி ஸ்டோர்ஸ் தளத்தில் பொருட்களைத் தேர்வு செய்து, வேண்டிய பொருட்களைப் பட்டியலிட்டால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வசதியான கட்டண முறையில் பொருட்களை நிரப்பி கொண்டு வந்து சேர்ப்போம். அது உங்கள் பற்பசையாகவும் இருக்கலாம் அல்லது உங்களது செல்லப் பிராணிக்கான உணவாகவும் இருக்கலாம். ஸ்விகி ஸ்டோர்ஸ் உங்களுடைய எல்லா தேவையையும் பூர்த்தி செய்யும்’ என்று தெரிவித்துள்ளது. இதன் சோதனை முயற்சிகள் தற்போது குருகிராமில் நடந்து வருகிறது.

முதல்கட்டமாக குருகிராமில் உள்ள 3,500 நிறுவனங்கள் ஸ்விகி ஸ்டோர்ஸில் பதிவு செய்துள்ளன. ஹெல்த்கார்ட், ஜாப்ஃப்ரெஷ் மற்றும் அப்போலோ பார்மசி உள்ளிட்ட பல நிறுவனங்கள் இச்சேவையில் இணைந்துள்ளன. இந்தச் சேவைகளுக்காக எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்ற தகவல்கள் குறித்து இதுவரையில் ஸ்விகி நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.

அமேசான் , ஃப்ளிப்கார்ட் மற்றும் பிக்பாஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்கள் டன்சோ நிறுவனத்துடன் இணைந்து இதேபோன்ற ஒரு சேவையை வழங்கி வருகின்றன. டன்சோவில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இப்போட்டியைச் சமாளிக்கவே நாஸ்பெர்ஸ் நிறுவனம் ஸ்விகியில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. ஸ்விகி நிறுவனத்துக்கு தற்போது நாடு முழுவதும் 1.25 விநியோகக் கூட்டாளிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon