மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

தம்பிதுரை விமர்சனத்துக்கு பாஜக பதில்!

தம்பிதுரை விமர்சனத்துக்கு பாஜக பதில்!

பாஜக அரசை மக்களவையில் தம்பிதுரை கடுமையாக விமர்சித்த நிலையில், அது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து என்று பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பாஜகவுக்கு எதிராகத் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவரும் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் தெரிவித்து வருகிறார். மக்களவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய தம்பிதுரை, பாஜக ஆட்சியில் பல விவகாரங்கள் தோல்வியடைந்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் பட்ஜெட்டை விமர்சித்த தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல என்று பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் அவினாசியில் நேற்று (பிப்ரவரி 12) செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்தே போட்டியிடும். நல்லாட்சி மற்றும் நேர்மையான வளர்ச்சியை முன்னிறுத்தி எங்களது கூட்டணி அமையும். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் அறிவிப்பு வெளியாகும். மக்களவையில் தம்பிதுரை பேசியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. பட்ஜெட் குறித்து அதிமுக அதிகாரபூர்வமான விமர்சனங்கள் எதையும் முன்வைக்கவில்லை. எனவே இதுகுறித்து பேச விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவிக்கையில், “தம்பிதுரையில் விமர்சனத்துக்கு அமைச்சர் பியூஷ் கோயல் பதில் கூறிவிட்டார். மாநிலங்கள் நிதியை வேண்டிக் கேட்டுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஜிஎஸ்டியாக இருந்தாலும் 15ஆவது நிதிக் குழுவாக இருந்தாலும் அதில் மாநிலங்களுக்கான நிதி அதிகரித்திருக்கிறது. தமிழகத்துக்கும் நிதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி மூலம் அதிக வருமான பெற்ற முதல் மூன்று மாநிலங்களில் தமிழகமும் வருகிறது. தம்பிதுரை தனது தனிப்பட்ட கருத்தைத்தான் கூறிக் கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக சட்டமன்றத்தில் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை பேசியதில் தவறில்லை என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon