மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

கசக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ், இனிக்கும் அனிமேஷன்? - காம்கேர் கே.புவனேஸ்வரி

கசக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ், இனிக்கும் அனிமேஷன்? - காம்கேர் கே.புவனேஸ்வரி

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? - 20

15 வயது வரை ராஜனுக்கு அறிவியல் பிடித்திருந்ததால் அவனது பெற்றோர் அவனுக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம் என நினைத்து +1, +2வில் பயாலஜி குரூப்பில் சேர்த்தனர் . ஆசிரியரின் அணுகுமுறை காரணமாக அவனுக்கு அந்தத் துறை பிடிக்காமல் போக கிடைத்த மதிப்பெண்ணுக்கு ஏற்ப பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்கிறான்.

இந்த இடத்தில் ராஜனும் அவனது பெற்றோரும் ஒரு விஷயத்தைக் கவனிப்பதில் கோட்டை விட்டுவிட்டார்கள். அதாவது ராஜனுக்கு அறிவியலில் ஆர்வம் என்பதைத் தாண்டி அவனுக்கு அனிமேஷனில்தான் ஆர்வம் இருந்தது என்பதை கவுன்சிலிங்கில்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பள்ளிகளில் அதிக அளவில் அறிவியல் கண்காட்சிகளே நடைபெறுகின்றன. அதில் தன் பங்களிப்பை வித்தியாசமாகக் கொடுப்பதற்காகச் செயல்முறை விளக்க அனிமேஷன் தயாரிப்பதற்காக அறிவியல் பாடத்தை ஆழமாக அலசிப் படித்தான். இதனால் அறிவியலில் நல்ல மதிப்பெண் கிடைத்தது.

கிரியேட்டிவிட்டியில் இருந்த அதீத ஈடுபாடு காரணமாக அதுசார்ந்த கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களைத் தானாகவே கற்றுக்கொண்டு பள்ளிகளில் நடக்கும் அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்க அறிவியல் சார்ந்த விஷயங்களைச் செயல்முறை விளக்கமாக அனிமேஷனில் தயாரிக்க ஆரம்பித்தான் ராஜன். அனைவரும் அவனுக்கு அறிவியலில் ஆர்வம் என நினைக்கத் தொடங்கினார்கள். அவன் மனதுக்குள்ளும் அதுதான் தன் ஆர்வம் என்று பதியத் தொடங்கியதில்தான் சிக்கல் ஆரம்பமானது.

அறிவியலுக்கு மட்டுமல்ல; எல்லா சப்ஜெக்டுக்கும் ராஜனால் அனிமேஷனில் செயல்முறை விளக்கம் தயாரித்திருக்க முடியும். ஆனால், அவனுக்குப் பள்ளியில் கிடைத்த வாய்ப்பு அறிவியலுக்கு மட்டுமே. எனவே அறிவியலை ஆழ்ந்து படித்தான். அப்படிப் படித்துப் புரிந்துகொண்டால்தானே அதை அனிமேஷன் தயாரிப்பாக்க முடியும்?

அவன் படித்த பள்ளியில் +2 பொதுத் தேர்வு என்பதால் எந்தச் சிறப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது. படிப்பு படிப்பு படிப்பு மட்டுமே என்ற ராணுவக் கட்டுப்பாடு. இதன் காரணமாக அவன் அறிவியலில் பெருத்த ஈடுபாடு காண்பிக்க மனம் செல்லவில்லை. ஆசிரியரின் அணுகுமுறை என்பது ஒரு உபரி காரணம். அவ்வளவே.

ஆனால் 18 வயதில் கல்லூரிக்குள் நுழையும்போது தனக்கு அனிமேஷனில் ஆர்வம் இருப்பதால் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்கலாம் என நினைத்து அதைத் தேர்ந்தெடுக்கிறான்.

அந்த நேரத்தில் தனக்கு எது பிடிக்கும் என்பதை ஓரளவேனும் கண்டுபிடிக்கும் திறன் ராஜனுக்கு வளர்ந்திருந்தது. அவன் அப்பா அம்மாவுக்கும் அதுவே சரியெனப்படவே கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்கிறான்.

அவன் நினைத்ததுபோல கம்ப்யூட்டர் சயின்ஸ் அவ்வளவு சுலபமாக இல்லை. காரணம், அவனது ஈடுபாடு கணிதம் லாஜிக் சார்ந்தது இல்லை என்பது புரிந்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பெரும்பாலும் லாஜிக் சார்ந்ததாகவே இருந்ததால், அவன் நினைத்திருந்ததைப்போல கிராஃபிக்ஸ், அனிமேஷன் போன்ற கிரியேட்டிவிட்டிக்கு வடிகாலாக இல்லை. அதுவும் தவறான சாய்ஸாகவே அமைந்துவிட்டது.

ஆனாலும் முயற்சியைக் கைவிடவில்லை. பெற்றோருடனும், அந்தத் துறை சார்ந்தவர்களிடமும் கலந்தாலோசித்து கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி முடிப்பதற்குள் வெளியே பயிற்சி நிறுவனங்களில் கிராஃபிக்ஸ் அனிமேஷன் சார்ந்த படிப்புகளைப் படித்து புராஜெக்ட்டுகள் செய்து அந்தத் துறையில் முதுகலைப் பட்டம் பெறுபவர்களைவிட அதிக அறிவை வளர்த்துக்கொள்கிறான்.

இப்படிப் படிக்கும்போது கம்ப்யூட்டர் சயின்ஸின் லாஜிக்கிலும் ஆர்வம் தானாகவே வர ஆரம்பித்தது.

அவன் ஆர்வத்துக்கான வடிகால் கிடைத்தவுடன் கட்டாயத்துக்காகக் கமிட் ஆன துறையும் புரிய ஆரம்பித்தது. அனிமேஷனுக்கும் குவிஸ் (Quiz), பஸில் (Puzzle) தயாரித்தல் போன்ற சில பிரிவுகளில் லாஜிக்கைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்ததும் மற்றொரு காரணம்.

கல்லூரி முடித்து வெளியே வரும்போதே வேலைவாய்ப்புடன் வெளியே வந்தான். பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்தத் தொடர்பில் ஓர் அனிமேஷன் நிறுவனத்தில் அனிமேட்டராகப் பணியில் அமர்கிறான்.

18-20 வயதில் கல்லூரியில் தான் தேர்ந்தெந்தெடுத்த பிரிவு, தனக்கு ஒப்புவராதபோதும் ராஜனால் தனக்கு விருப்பமான பிரிவில் ஜெயிக்க முடிந்ததைப் போல, எல்லோராலும் கல்லூரி காலத்துக்குள்ளேயே தனக்குப் பிடித்தத் துறையில் நுழைவது சாத்தியமல்ல.

கல்லூரியில் தேர்ந்தெடுத்த பிரிவைக் கட்டாயத்துக்காகப் படித்து முடித்து வெளியே வந்தும் தங்களுக்கான துறையைத் தேர்ந்தெடுக்க முடியும்.

எப்படி?

கற்போம்… கற்பிப்போம்!

(கட்டுரையாளர் : காம்கேர் கே.புவனேஸ்வரி - காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் ஐடி நிறுவனத்தின் CEO. நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர். M.Sc., Computer Science, M.B.A பட்டங்கள் பெற்றவர். தொழில்நுட்பம், வாழ்வியல் குறித்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது சாஃப்ட்வேர், அனிமேஷன் தயாரிப்புகளும் தொழில்நுட்பப் புத்தகங்களும் பல கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

இப்படியும் ஒரு காரணமா?

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon