மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 மா 2020

நான் உயிரோடுதான் இருக்கிறேன்: சுரேஷ் ரெய்னா

நான் உயிரோடுதான் இருக்கிறேன்: சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளப் பக்கங்களிலும் சில யூடியூப் சேனல்களிலும் வதந்தி பரப்பப்பட்டது. இதைப் பார்த்த ரெய்னாவின் நண்பர்கள், உறவினர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வதந்தி பரப்பும் யூடியூப் சேனல்கள் மேல் புகார் அளித்துள்ளதாகவும் ரெய்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த சில தினங்களாக நான் கார் விபத்தில் சிக்கிவிட்டதாக தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த வதந்தி எனது குடும்பத்தையும் நண்பர்களையும் மிகவும் பாதித்துள்ளது. தயவுசெய்து இது போன்ற தவறான செய்திகளைப் புறக்கணியுங்கள். கடவுளின் அருளால் நான் நலமுடன் இருக்கிறேன். அந்த யூடியூப் சேனல்கள் மேல் புகார் அளித்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மோசமான ஆட்டத்தாலும் உடற்தகுதி சோதனையில் தேர்வாகாததாலும் ரெய்னாவுக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைக்காமல் உள்ளது. அவர் கடைசியாக கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொண்டார். தற்போது நடந்துமுடிந்த ரஞ்சி கோப்பை தொடரில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடினார். ஆனால், விதர்பா அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணியில் இடம்பெற ரெய்னா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா 768 ரன்கள் எடுத்துள்ளார். 226 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 5,615 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆனால், ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை ரெய்னா எப்போதும் முன்னிலையில் இருக்கிறார். இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரை ரெய்னா மிகவும் எதிர்பார்த்துள்ளார்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon