மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

சுகாதாரத் துறைச் செயலாளருக்கு 14 கேள்விகள்!

சுகாதாரத் துறைச் செயலாளருக்கு 14 கேள்விகள்!

குழந்தை கடத்தலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக சுகாதாரத் துறைச் செயலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடலாடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரியும், அங்குள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரியும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று (பிப்ரவரி 12) நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, “குழந்தை கடத்தலைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? குழந்தைகள் பிறப்பு வார்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திக் கண்காணிக்கப்படுகிறதா? தமிழகத்தில் எத்தனை மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன? எந்தெந்த மருத்துவமனைகளில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை? சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற கருவிகள் எத்தனை மருத்துவமனைகளில் உள்ளன? எத்தனை மருத்துவமனைகளில் இந்தக் கருவிகள் செயல்பாட்டில் உள்ளன? உரிய படுக்கை வசதிகள் உள்ளனவா? மருத்துவர்களின் வருகையைப் பதிவு செய்யும் பயோமெட்ரிக் பொருத்தப்பட்டுள்ளதா?” என்பது உட்பட 14 கேள்விகளை எழுப்பினர் நீதிபதிகள். இவற்றுக்குப் பதிலளிக்குமாறு தமிழக சுகாதாரத் துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள் காலி பணியிடங்கள் உள்ளன என்பது குறித்து வரும் மார்ச் 7ஆம் தேதியன்று விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமென்று சுகாதாரத் துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon