மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

விஜயகாந்த் ரிட்டன்ஸ்: தேமுதிகவினர் உற்சாகம்!

விஜயகாந்த் ரிட்டன்ஸ்: தேமுதிகவினர் உற்சாகம்!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, விரைவில் சென்னை திரும்பவுள்ளதாக நேற்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்திருந்தார். இதனால் உற்சாகத்தில் உள்ள தேமுதிகவினர் விஜயகாந்துக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவந்த விஜயகாந்த் இரண்டாம்கட்ட உயர் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா, இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் ஆகியோர் உடன் சென்றனர்.

அமெரிக்கா சென்ற விஜயகாந்த், குடியரசு தினம், புத்தாண்டு உள்ளிட்டவற்றுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இதற்கிடையே அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் அமெரிக்கா சென்றார் என்று தமிழின் முதல் மொபைல் தினசரி மின்னம்பலத்தில் டிசம்பர் 29ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் விஜயகாந்துக்கு அமெரிக்காவில் என்ன சிகிச்சை நடக்கிறது? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

தொடர்ந்து, ஜனவரி 8ஆம் தேதி அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவர் பூரண குணமடைந்ததாகவும், விரைவில் சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டோம். கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் பேசி வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் விஜயகாந்த் சென்னை வந்தவுடன் தங்களுடைய அறிக்கையை அவரிடம் சமர்ப்பிப்போம். கூட்டணி குறித்து அவர் அறிவிப்பார்” என்று சுதீஷ் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் தேமுதிக கொடி நாளான நேற்று (பிப்ரவரி 12) விஜயகாந்த் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த ட்வீட்டில், “வல்லரசு திரைப்படத்தில் முதன்முறையாக தேமுதிக கொடி இடம் பெறும் காட்சி” என்று கூறி அந்தக் காட்சியின் வீடியோவையும் பதிவு செய்திருந்தார். இதனால் தேமுதிகவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

விஜயகாந்த் பூரண குணமடைந்ததை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் தேமுதிக சார்பில் இன்று (பிப்ரவரி 13) மயிலம் முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தேமுதிகவினர் வெளியிட்டுள்ள அழைப்பிதழில், கேப்டனுக்காக முடிக் காணிக்கை, காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல் உட்படச் சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், மகளிர் அணியினரும் திரளாக வந்து சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதன், 13 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon