மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

மாணவிக்குப் பாலியல் தொல்லை: தொழிலதிபர் கைது!

மாணவிக்குப் பாலியல் தொல்லை: தொழிலதிபர் கைது!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் 76 வயதான தொழிலதிபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரிலுள்ள வடக்கு உடையார் பாளையத்தைச் சேர்ந்தவர் வசந்தி. இவரது கணவர் ராஜா, சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவர்களது ஒரே மகள் சுவாதி (17), ஆத்தூரிலுள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். (தாய், மகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).

சுவாதியின் தாய் வசந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால், தனது தாயின் தங்கையான சாந்தி என்பவர் வீட்டில் தங்கிப் படித்து வருகிறார் சுவாதி. நேற்று (பிப்ரவரி 11) இரவு 10 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரொன்றை அளித்தார் சுவாதி. தன்னுடைய சித்தி குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளரான நடராஜன் (76) என்பவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக, அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

வீட்டைச் சுத்தம் செய்யவும், தண்ணீர் எடுத்து வைக்கவும் அவ்வப்போது தன்னை நடராஜன் அழைத்து வேலை வாங்கியதாகத் தெரிவித்த சுவாதி, கடந்த இரண்டு மாதங்களாக அவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகக் கூறியுள்ளார். இதற்கு ஆதரவாக, அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்த சிலர் வீடியோ ஆதாரங்களைப் போலீசாரிடம் அளித்துள்ளனர். இதன் பேரில் தொழிலதிபர் நடராஜன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளார் ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் கேசவன்.

ஆத்தூரில் உள்ள ஹீரோ மோட்டார் நிறுவத்தின் முகவராகச் செயல்பட்டு வருகிறார் நடராஜன். மனைவியை இழந்த இவர் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்குப் பல இடங்களில் சொந்த கட்டடங்களும், வணிக நிறுவனமும், அடுக்கு மாடி வீடுகளும் உள்ளன. இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய் பணத்தை வாடகையாகப் பெற்று வருகிறார் நடராஜன்.

ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நடராஜனைச் சிறைக்கு அனுப்பாமலேயே வெளியே அழைத்து வருவதற்கான வேலையைச் சில உள்ளூர் பிரமுகர்களும், அரசியல் கட்சியினரும் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, புகார் கொடுத்த மாணவியின் சித்தியைச் சரிக்கட்டி புகாரைத் திரும்பப் பெறும் வேலையில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாகவும், காவல் துறை தரப்பில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டிய ஏற்பாடுகளை இன்னொரு தரப்பினரும் மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon