மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

நிர்மலா தேவி வழக்கு: உச்ச நீதிமன்றம் ஜாமீன்!

நிர்மலா தேவி வழக்கு: உச்ச நீதிமன்றம் ஜாமீன்!

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியுடன் கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவருக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, சில மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக செல்போன் ஆடியோ வெளியான வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இவர்கள் சிறையில் இருந்து வருகின்றனர்.

விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இவர்கள் மூவரும் ஜாமீன் கேட்டுப் பல முறை மனுதாக்கல் செய்தனர். ஆனால், அவை அத்தனையும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு முருகன், கருப்பசாமி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம்.

நிர்மலா தேவி தொடர்பான வழக்கு விசாரணை, தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 30ஆம் தேதியன்று அவர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, முதல்முறையாகச் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஊடகங்களில் தனது பெயரில் வெளியான வாக்குமூலம் பொய்யானது என்று தெரிவித்தார் நிர்மலா தேவி. தனக்கு ஜாமீன் வழங்கப்படாததன் பின்னணியில் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளதாகக் கூறினார். அப்போது, அவரை பெண் போலீசார் வேகமாக இழுத்துச் சென்றனர்.

இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 12) உச்ச நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமி ஜாமீன் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதனை விசாரித்த நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் தலைமையிலான அமர்வு, இரண்டு பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக, நீதிமன்ற விசாரணையின்போது இவர்களை ஜாமீனில் விட தமிழகக் காவல் துறை எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon