மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

5 வருடங்களுக்கும் அதிமுகவுக்கே ஆதரவு: கருணாஸ்

5 வருடங்களுக்கும் அதிமுகவுக்கே ஆதரவு: கருணாஸ்

தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த எம்.எல்.ஏ கருணாஸ், வரும் 5 வருடங்களும் என்னுடைய ஆதரவு அதிமுகவுக்குத்தான் என்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று முதல் சட்டப்பேரவையில் நடைபெற்றுவருகிறது.

அவையில் இன்று (பிப்ரவரி 12) தனது கோரிக்கைகளை பரிசீலிப்பதாகக் கூறிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், “இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் கூவத்தூருக்கு சென்றிருக்க மாட்டேன். ஜெயலலிதா தியாகத்தினால் உருவாக்கிய இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்களில் நானும் ஒருவன். மீண்டும் நான் தேர்தல் போட்டியிடுவேனா அல்லது அரசியலில் இருப்பேனா என்பது தெரியாது. எனவே ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட நான் இந்த 5 ஆண்டுகளில் எனது தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆகவே ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கருணாஸ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததோடு மட்டுமல்லாமல், ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதமும் அளித்தார். சில மாதங்களுக்கு முன்பு முதல்வரை விமர்சித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் ஜாமீனில் வெளிவந்த கருணாஸ், அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். மேலும் கூவத்தூர் ரகசியங்களை வெளியிடுவேன் என்றும் எச்சரித்திருந்தார். இதற்கிடையே சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொடுத்தவர் பின்னர் திடீரென அதை வாபஸ் வாங்கினார். ஜனவரி 2ஆம் தேதி முதல்வரையும் சந்தித்திருந்தார், இந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது 5 ஆண்டுகளுக்கும் ஆதரவு தருவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் பேட்டியளித்த கருணாஸ், “என் தொகுதி மற்றும் சமூகம் சார்ந்து நான் விடுத்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறியதற்கு நன்றி தெரிவித்தேன். அப்போதுதான் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறினேன்” என்று விளக்கம் அளித்தார்.

வரக்கூடிய காலங்களையும் நேரங்களையும் பொறுத்துதான் தன்னுடைய முடிவுகள் இருக்கும் எனக் கூறிய கருணாஸ், அரசின் மீது தான் வைத்த விமர்சனங்களில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெரிவித்தார். தனது தொகுதிக்கு எதுவுமே செய்ய முடியவில்லை என்று வேதனை தெரிவித்த அவர், தனக்கு காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் காரியம்தான், தனது தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம் எனவும் தெரிவித்தார்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon