மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

இளைய நிலா: லவ் பண்ணினா சரியா போய்விடுமா?

இளைய நிலா: லவ் பண்ணினா சரியா போய்விடுமா?

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 13

ஆசிஃபா

காதலிப்பவர்களுக்குப் பல பிரச்சினைகள். வீட்டில், குடும்பத்துக்குள், சாதி, மதம், கல்வி, பொருளாதாரம் என்று அனைத்திலும் பலருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை. அவற்றை எதிர்கொள்ளும் விதம் தனிநபர் சார்ந்தது. இது ஒருபுறம். மறுபுறம் பார்த்தால், நான் காதலிக்கப்படவில்லையே என்றொரு பெரும் கவலை நிலவிக்கொண்டிருக்கிறது.

அன்று சொன்னேனே, என் தோழி தனக்கு யாருமில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தாள் என்று? அவள் சொன்ன இன்னொரு விஷயம் என்னை யோசிக்க வைத்தது. “இதெல்லாமே லவ் பண்ணா சரியா போய்டும்!” இதைக் கேட்டு முதலில் குழப்பமாகத்தான் இருந்தது. காரணத்தைக் கேட்டபோது அவள் சொன்னது இன்னும் ஆழமாக யோசிக்க வைத்தது. “இல்ல, நம்ம லவ் பண்ணா நமக்குன்னு ஒருத்தங்க இருக்காங்கன்னு ஒரு நம்பிக்கை வரும். அதான் சொன்னேன்.”

இதை இரண்டு விதமாக அணுகலாம். ஒன்று, நெகிழ்ந்து போய் உணர்ச்சிவசப்படலாம். இன்னொன்று, ஏன் வாழ்வதற்கு நமக்கென்று ஒருவர் தேவைப்படுகிறார் என்று சிந்திக்கலாம். நான் இரண்டாவது வேலையைச் செய்கிறேன். சிறு வயது முதலே, வாழ்வதற்கான அர்த்தமாக வெவ்வேறு வகையில் நமக்குக் கற்பிக்கப்படுவது காதல் / திருமணம். நாம் வாசிக்கும் fairy tales புத்தகங்களிலும் சரி, பார்க்கும் படங்களிலும் சரி இளவரசிக்கான ஒரு இளவரசன் வந்துகொண்டிருப்பான்; இருவர் சந்திக்கும்போது உலகமே மறந்து போகும். அதைத் தொடர்ந்து and they lived happily ever after என்று சொல்லி முடித்துவிடுவார்கள். நம் மூளைக்குள் ஆழமாகப் பதிந்துபோன இந்த விஷயம் மிகப் பெரிய அபத்தம்.

நமக்கு self - love என்ற விஷயமே சொல்லித்தரப்படவில்லை. நம்மை நமக்கு நன்றாகத் தெரியுமா? பலருக்கும் அப்படித் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பே வழங்கப்படவில்லை. நண்பர்கள் அனைவரும் காதலிக்கும்போது நாம் மட்டும் தனியாக இருக்கிறோமே என்ற எண்ணம்தான் நம்மை ஆக்கிரமிக்கிறதே தவிர, இந்தத் தனிமையின் அழகையோ, சுதந்திரத்தையோ, வாய்ப்பையோ நாம் உணர்வதில்லை.

கதைகளில் மட்டுமே இளவரசியும் இளவரசனும் சேர்ந்ததும் end card போடுவார்கள். நிஜ வாழ்வில், அதன் பிறகுதான் எல்லாமே ஆரம்பிக்கிறது. தனியாக நாம் இருப்பது மிகப் பெரிய வாய்ப்பு. நமக்கு என்ன பிடிக்கும் என்பதைத் தேடுவோம். Candle light dinner பிடிக்குமா? உங்களுக்கே உங்களுக்கென சாப்பாடு செய்து தனியாக அமர்ந்து சாப்பிடுங்கள். நமக்கு நம்மைவிட மிகப் பெரிய துணை கிடைக்கவே கிடைக்காது. நம் மீது நமக்கு முழுமையான காதல் ஏற்பட்ட பிறகுதான், நாம் சந்திக்கும் நபருக்கு நாம் முழுமையான அன்பைக் கொடுக்க முடியும்.

நம் தலைமுறையினருக்கு நம்பிக்கையும் சரி, காத்திருப்பும் சரி... சிறிதுகூட இல்லை என்றுதான் சொல்வேன். Motivation வகுப்புகள் தெருவுக்கு நான்கு நடக்கின்றன. ஆனால் வெகு சிலருக்கே உள்ளூர நம்பிக்கை வருகிறது. 70 வயதைக் கடந்து இன்று வாழும் பெரியவர்களிடம் சென்று, எனக்கு இன்னும் வாழ்க்கைல எதுவுமே கிடைக்கல என்று சொன்னால், அவர்கள் அனைவரின் பதிலின் சாரமும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கும்: “உனக்குன்னு உள்ளது உனக்குக் கிடைக்கும். ரொம்ப கவலைப்படாதே!” என்பதுதான்!

இதையேதான் கல்யாண்ஜியின் இந்த அதியற்புத வரிகள் சொல்ல வருவதாக எனக்குத் தோன்றுகிறது.

எங்கு பெய்யும் மழையிலும்

ஒரு துளி

எனதுடல், என் மனம்

நனைப்பதற்கிருக்கும்.

எங்கு மலரும் ஒரு சிறு பூவிலும்

எனக்கென ஒரு துளி

மது நிறைந்திருக்கும்.

- கல்யாண்ஜி

இதில் எந்தத் தவறும் இல்லை!

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon