மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

மத நம்பிக்கை இழிவு: தடுக்க உத்தரவு!

மத நம்பிக்கை இழிவு: தடுக்க உத்தரவு!

மற்ற மதத்தினரின் வழிபாடு, நம்பிக்கைகள் குறித்து இழிவாகப் பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை நிகழ்ச்சி அமைப்பாளர் அளித்தால் மட்டுமே மதம் தொடர்பான நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிரகோடு பகுதியைச் சேர்ந்த தேவஆசிர் என்பவர் மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். அதில், “காஞ்சிரகோடு அரசு புறம்போக்கு நிலத்தில் நற்செய்திக் கூட்டம் நடத்த மார்த்தாண்டம் போலீசாரிடம் அனுமதி கேட்டோம். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே, எங்கள் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி என்.சேஷாயி விசாரித்தார். “இது போன்ற வழக்குகளில் நீதிமன்றம் தலையிடாது. இது போன்ற வழக்குகளில் முடிவெடுக்கக் கூடிய அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக, உள்நோக்குடன் செயல்பட்டதற்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிடும்.

அனைத்து மதத்தினரும் அவரவர் மதத்தைப் பின்பற்ற அரசியலமைப்புச் சட்டம் உரிமை அளித்துள்ளது. மதம் தொடர்பான கூட்டங்களின்போது அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள மதச்சார்பின்மைக்குப் பங்கம் ஏற்படாத வகையில், நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதிக்கும்.

மதக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது, சம்பந்தப்பட்ட மதத்தைச் சேர்ந்த பொறுப்பாளரிடம் ‘பிற மதத்தினர் மற்றும் அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசமாட்டோம், மீறினால் நடவடிக்கை எடுக்கலாம்’ என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் பெற வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர் மனுவைப் பரிசீலித்து அனுமதி அளிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon