மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

பெண் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகரிப்பு!

பெண் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகரிப்பு!

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6,962 பெண் மற்றும் 4,687 ஆண் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிப்ரவரி 8ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கிடையேயான தத்தெடுப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 11,649 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. 2015 -16 ஆம் ஆண்டில், இந்தியாவில் 3,011 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் 1,855 குழந்தைகள் பெண் குழந்தைகள் ஆகும். 2016-17 ஆம் ஆண்டில், 3,210 குழந்தைகள் மற்ற நாடுகளில் இருந்து தத்தெடுக்கப்பட்டன. இதில்1,915 பேர் பெண்கள் ஆவர். 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டிற்கான (டிசம்பர் 2018 வரை) புள்ளிவிரங்களை பொறுத்தவரை 3,276 மற்றும் 2,152 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன இதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை முறையே 1943 மற்றும் 1249 ஆகும். அதாவது ஒட்டு மொத்த எண்ணிக்கையில் 60 சதவிகிதத்தினர் பெண் குழந்தைகளாக உள்ளனர் என்று இந்தப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், 1956 இன் கீழ், அதிகமான குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக இணை அமைச்சர் விரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் உறுப்பினர், பிரஜ்க்தா குல்கர்ணி கூறுகையில், ”அதிக அளவிலான பெண் குழந்தைகள் தத்தெடுப்பு என்பது சிறிது சந்தேகமாகத்தான் உள்ளது. எனினும் இது பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கிறது. தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான மக்கள் மனப்பான்மை மாறி வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

2016 தரவுப்படி இந்தியாவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 877 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றன எனக் கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon