மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

டாஸ்மாக்: அனுமதியற்ற பார்களை மூட உத்தரவு!

டாஸ்மாக்: அனுமதியற்ற பார்களை மூட உத்தரவு!

உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாகச் செயல்படும் டாஸ்மாக் பார்களை இழுத்து மூட வேண்டும் என தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பானங்களுக்கு பில் வழங்க வேண்டுமென்று அதில் தெரிவித்திருந்தார். “உரிமக் கட்டணம் மற்றும் சுகாதாரமில்லாமல் இயங்கும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் கடந்த நவம்பர் மாதம் மனு அளித்தேன். எனது மனு மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நீதிமன்றம் தலையிட்டு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று (பிப்ரவரி 12) நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மதுவை அதிக விலைக்கு விற்றதாக கடந்த ஆண்டு 3,500 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிமம் இல்லாமல் செயல்பட்ட 2,505 சட்டவிரோத பார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது” என்று தெரிவித்தார்.

“வழக்குகள் பதிவு செய்வதால் மட்டும் சட்டவிரோத பார்களை தடுத்துவிட முடியாது. மீண்டும் மீண்டும் பார்கள் சட்ட விரோதமாகத் தான் செயல்படும். சட்டவிரோத பார்கள் என தெரிந்தால் எப்ஐஆர் பதிவு செய்து, உடனடியாக பார்களை மூட வேண்டும்” என தெரிவித்தனர் நீதிபதிகள். சட்டவிரோத பார்கள் மீது டாஸ்மாக் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon