மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

பாலாற்றில் 30 தடுப்பணை: கவன ஈர்ப்புத் தீர்மானம்!

பாலாற்றில் 30 தடுப்பணை: கவன ஈர்ப்புத் தீர்மானம்!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டப்படும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாலாற்றின் குறுக்கே 500 மீட்டர் இடைவெளியில் ஒரு தடுப்பணை அமைக்கும் விதமாக, 30 புதிய தடுப்பணைகள் கட்டுவதற்கு கருத்துரு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது என்று பிப்ரவரி 4ஆம் தேதி மின்னம்பலம் செய்தியில் கூறியிருந்தோம். பாலாறு பாதுகாப்புப் போராளி அம்பலூர் அசோகன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்று அதனை மின்னம்பலத்திடம் பகிர்ந்திருந்தார்.

இச்செய்தி வெளியான மறுநாளே பாமக நிறுவனர் ராமதாஸ் ”பாலாற்றின் குறுக்கே ஏராளமான தடுப்பணைகளை ஏற்கனவே கட்டியுள்ள ஆந்திர அரசு, அடுத்தக் கட்டமாக மேலும் 30 தடுப்பணைகளைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தவறு என்று தெரிந்தும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் வகையில், சட்டவிரோதமாக தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு தொடர்ந்து முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்” என்று அறிக்கை விட்டிருந்தார்.

இதையடுத்து இன்று திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் துரைமுருகன், ஆர்.கார்த்தி, ஏ.பி.நந்தகுமார், ஏ.நல்லதம்பி ஆகியோர் இவ்விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளனர். அதில், ’பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் திட்டத்தால் பொது மக்களிடையே பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்க’ இச்சிறப்புத் தீர்மானத்தை விதி எண் 55 கீழ் கொண்டு வருவதாக தெரிவித்திருந்தனர்.

இந்தத் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் கே.பழனிசாமி பாலாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “பாலாற்றின் குறுக்கே உள்ள 21 தடுப்பணைகள் பழுதுபார்ப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகளைக் கட்ட உத்தேசித்திருப்பதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, இத்தடுப்பணைகளை கட்ட அனுமதி வழங்கக் கூடாது எனவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தடுப்பணைகள் கட்டக் கூடாது என நீர்வளத் துறைக்கு அறிவுரைகள் வழங்குமாறும் 06.02.2019 அன்று ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை தமிழக அரசு சட்ட ரீதியாக மிக உன்னிப்புடனும், கவனத்துடன் அணுகி வருகிறது” என்றார்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon