மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 17 அக் 2019

அகழ்வராய்ச்சி குறித்த பதில்: நீதிபதிகள் எச்சரிக்கை!

அகழ்வராய்ச்சி குறித்த பதில்: நீதிபதிகள் எச்சரிக்கை!

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தியதின் முடிவு என்ன என்றும், அதன் அறிக்கையை ஏன் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காமராஜ் என்பவர் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். “தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரம்பு பகுதியில் 13,000 ஆண்டு பழமையான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல வரலாற்றுச் சான்றுகள் புதைந்துள்ளதால் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று அம்மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 12) மதுரைக் கிளையில் நடந்தது. அப்போது, “தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தியதின் முடிவு என்ன? அந்த அறிக்கையை ஏன் இதுவரை சமர்ப்பிக்கவில்லை” என்று மத்திய அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.

“தூத்துக்குடி சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்தும் கோரிக்கை குறித்து மத்திய, மாநிலத் தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும். பதிலளிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்” என எச்சரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon