மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 26 பிப் 2020

பிங்க் பாணியில் மீண்டுமொரு திரில்லர்!

பிங்க் பாணியில் மீண்டுமொரு திரில்லர்!

அமிதாப் பச்சன் நடித்த ‘பட்லா’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை தப்ஸியும் நடித்துள்ளார். ட்ரெய்லரின் தொடக்கத்தில் அமிதாப் பச்சனின் குரலில், “பழிவாங்குவது எப்போதுமே சரியானதாக இருக்க முடியாது. ஆனால் எப்போதுமே மன்னிப்பதும் சரியானதாக இருக்காது” என்ற வசனம் வருகிறது. படத்தில் அமிதாப் பச்சன் ஒரு வழக்கறிஞராக நடிக்கிறார். நடிகை தப்ஸி மீது கொலைக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் தான் குற்றமற்றவர் என்று தப்ஸி முறையிடுகிறார். அவருக்காக அமிதாப் பச்சன் வாதிடுகிறார்.

இக்கதையில், உண்மைக்கு பல முகங்கள் உள்ளன. அவற்றை வைத்து ஒரு நீதிமன்ற திரில்லர் திரைநடை கொண்ட படமாக இதை உருவாக்கியுள்ளனர். இப்படத்தை இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்கியுள்ளார். ரெட் சில்லிஸ் எண்டர்டய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. மார்ச் 8 அன்று இப்படம் வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு அமிதாப் பச்சனும், தப்ஸியும் ‘பிங்க்’ படத்தில் நடித்தனர். அப்படத்திலும் அமிதாப் பச்சன் வழக்கறிஞர் வேடத்தில் நடித்தார். அதிலும் தப்ஸிக்காகவும், அவரது இரு தோழிகளுக்காகவும் அமிதாப் பச்சன் வாதிடுவார்.

பெண்களின் விருப்பமின்றி அவர்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறைகளை சாடும் விதத்தில் பிங்க் படம் உருவாக்கப்பட்டது. இந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிவருகிறது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்லா ட்ரெய்லரை காண...

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon