மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

கோயில் நிலங்கள் மீட்பு: நீதிபதிகள் அதிருப்தி!

கோயில் நிலங்கள் மீட்பு: நீதிபதிகள் அதிருப்தி!

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதற்கான இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் பரவையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வடக்குவாசல் செல்லியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தரக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று (பிப்ரவரி 12) விசாரணை செய்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

அப்போது, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோயில் நிலங்களை மீட்பதற்கான அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை எனத் தெரிவித்தனர்.

“இது தொடர்பாக, அறநிலையத் துறை ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர். தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு இடங்களைத் தானமாக வழங்கியோர் பட்டியல் மற்றும் சொத்து விவரங்கள் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக உள்ளதா என்பதை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதிப்படுத்த வேண்டும். இது குறித்து வருவாய்த் துறைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த் துறைச் செயலர் அறிவுறுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கை வரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon