மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

தமிழகத்தில் 100 விழுக்காட்டை எட்டும் எல்பிஜி கவரேஜ்!

தமிழகத்தில் 100 விழுக்காட்டை எட்டும் எல்பிஜி கவரேஜ்!

தமிழகத்தில் எல்பிஜி சமையல் எரிவாயு இணைப்பு 97.9 விழுக்காட்டை எட்டியுள்ளது.

இந்திய அளவில் சமையல் எரிவாயு இணைப்பு அதிகம் பெற்ற பயனாளிகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 2.02 கோடி வாடிக்கையாளர்கள் எல்பிஜி எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் எல்பிஜி இணைப்பைப் பெற்றவர்களுக்கு மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் பயனளித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 3 பொதுத் துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக ஆண்டுக்கு 6 லட்சம் பேருக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி வருகின்றன. அதில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு 9 லட்சம் பேருக்கு புதிதாக எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்களின் அறிக்கைகள் கூறுகின்றன.

இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.சீதாராமன் தி இந்து ஆங்கில ஊடகத்திடம் பேசுகையில், “இன்னும் சில லட்சம் பேருக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்கினால் தமிழகத்தில் 100 விழுக்காடு எட்டிவிடலாம். அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஏற்கெனவே 100 விழுக்காடு எல்பிஜி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் எல்பிஜி இணைப்பைப் பெறாத மக்களைக் கிராமம் கிராமமாக ஆய்ந்து கண்டறிந்து கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் எல்பிஜி விநியோகம் உறுதிப்படுத்தப்படும், அது ஒரு பிரச்சனையல்ல” என்று தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் எல்பிஜி இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 1.61 கோடியாக (80.08 %) மட்டுமே இருந்தது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் விதமாக 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த விறகு, சாணம் போன்றவற்றை பயன்படுத்தும் முறைக்கு மாற்றாக எல்பிஜி எரிவாயு இணைப்பை வழங்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon