மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சியம்மன் பெயர் வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை விமான நிலையத்துக்கு மீனாட்சியம்மன் பெயர் வைக்க வேண்டும். பல்வேறு சாதித் தலைவர்களின் பெயரை வைக்கக் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. பல்வேறு சமூகத்தினரும் சமயத்தினரும் வாழும் மதுரை நகரத்தில், சாதித் தலைவர்களின் பெயரை வைப்பது சரியாக இருக்காது.
அதனால், மதுரையின் அடையாளங்களில் ஒன்றான மீனாட்சியம்மன் பெயரை வைக்க உத்தரவிட வேண்டும்” என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நேற்று (பிப்ரவரி 11) விசாரணை செய்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. அப்போது, இது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு ஆணை பிறப்பித்து, இந்த வழக்கை முடித்து வைத்தது.