மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

பாஜகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சு: சுதீஷ்

பாஜகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சு: சுதீஷ்

கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் பேசிவருவது உண்மைதான் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், தேமுதிக சார்பில் அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் தலைமையில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கூட்டணி தொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் சென்னையிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 12) செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், “கிளைக் கழகங்களை பலப்படுத்துவது, தொகுதி பொறுப்பாளர்களை நியமிப்பது என மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டோம். கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் பேசிவருகிறோம். விஜயகாந்த் வந்தவுடன் எங்களுடைய அறிக்கையை அவரிடம் சமர்ப்பிப்போம். கூட்டணி குறித்து அவர் அறிவிப்பார். பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசிவருவது உண்மைதான். மற்ற கட்சிகளுடனும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

அதிமுகவுடனான பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, “2005இல் கட்சி ஆரம்பித்த பிறகு, எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வராத கட்சியே கிடையாது. அதனடிப்படையில் இன்றும் எங்களுடன் அனைத்து கட்சிகளும் பேசிவருகின்றன. விஜயகாந்த் இன்னும் இரண்டு வாரங்களில் சென்னை வரவுள்ளார். எதுவாக இருந்தாலும் அவர் வந்தபிறகுதான் அறிவிக்கப்படும். இம்மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்டுவிடும். ஊடகங்களில் வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை ” என்று பதிலளித்தார். மக்களவைத் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடச் சொல்லும் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்றும் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் அதிமுக - பாஜக - பாமக - தேமுதிக கூட்டணிக்கு எத்தனை சீட்? ரகசிய சர்வே முடிவு! என்ற தலைப்பில் பாஜகவுடனான தேமுதிக கூட்டணி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon