மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

ரஜினி: பெரியாரும் வாழ்த்தும் சூப்பர் அப்பா !

ரஜினி:  பெரியாரும் வாழ்த்தும் சூப்பர் அப்பா !

ஆரா

ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் நேற்று பிப்ரவரி 11 ஆம் தேதி நடந்தத் திருமணம் மிக விமரிசையாக, பல்வேறு பிரபலங்கள், பெரிய மனிதர்களின் ஆசீர்வாதத்தோடும் வாழ்த்துகளோடும் நடந்தது.

ரஜினியின் மகளும், அவரது கணவரும் மணமகள்-மணமகனாக வீற்றிருக்க நடுவே சௌந்தர்யாவின் பிஞ்சு மகன் அமர்ந்திருக்க அதை ரஜினி அருகே நின்று பார்க்கும் அந்தப் புகைப்படம் ரஜினிக்கு சூப்பர் அப்பா என்ற அன்புப் பட்டத்தை இந்த தமிழ்ச் சமூகத்தில் பெற்றுத் தந்திருக்கிறது.

ரஜினியின் பெரும்பாலான படங்களில், பெண்கள் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும், கிழித்த கோட்டைத் தாண்டக் கூடாது என்ற மரபுக் குரலே அவரது குரலாக ஒலிக்கும். மன்னன் படத்தில் பெண்களை சண்டி ராணியாகவும், அல்லி ராணியாகவும் காட்டி கப்பம் கேட்கும் ரஜினி, படையப்பாவில் நீலாம்பரிக்கு பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று தியேட்டர்கள் அதிர அதிர வகுப்பெடுப்பார்.

அந்த ரஜினியா இந்த ரஜினி என்று நினைக்கையில்தான் சூப்பர் ஸ்டார் சூப்பர் அப்பாவாகிவிட்டார்.

ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் முதல் திருமண வாழ்வு இனிக்கவில்லை. அதனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில்தான் ரஜினியே தன் இரண்டாவது செல்ல மகளுக்காக அவரது பாணியில் சொல்ல வேண்டுமானால்... ‘ச்சும்மா அதிர அதிர’ கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்.

இந்த விஷயம் இரண்டு வேறுபட்ட உளவியல் பார்வைகளை முன்னிறுத்தியிருக்கிறது. ‘அம்மாவின் திருமணத்தைப் பார்த்த மகன்’ என்ற கேலி கிண்டல்கள் ஒருபக்கம் எவ்வித லஜ்ஜையும் இன்றி ரஜினி குடும்பத்தைக் குறிவைத்து ஏவப்படுகின்றன. இன்னொரு பக்கம் ஒரு பெண்ணின் அதுவும் இளம் பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட தந்தையாக ரஜினியை பாராட்டித் தள்ளும் நெகிழ்ச்சியான கருத்துரைகள் ரஜினி மீது வாழ்த்துப் பூக்களாக தூவப்படுகின்றன. இந்த வாழ்த்துப் பூக்களின் பின்னால் பெரியாரும் சிரித்து ரஜினியை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்.

பெரியாரை தமிழ்நாட்டின் பொதுப்புத்தி கடவுள் நம்பிக்கை பற்றி வறட்டு வகுப்பெடுப்பவர் என்றே முத்திரை குத்தி வைத்திருந்தது. பெரியார் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலை நடைமுறை இயலோடு பொருத்தி எவ்வளவு நுட்பமான தொலைநோக்குக் சிந்தனைகளை அன்றே வெளியிட்டிருக்கிறார் என்பதெல்லாம் அந்த பொதுமைச் சித்திரிப்புகளுக்குள் புதைந்து கிடந்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி சமீப ஆண்டுகளாகத்தான் பெரியாரின் சமூகக் கோட்பாடுகள் சமூகத்தின் பல்வேறு பிரதிநிதிகளிடையே அலசப்படுகின்றன என்பது ஆறுதல் தரத்தக்க விஷயம்.

திருமணம் என்பதே வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் என்று வரையறுக்கும் பெரியார், மறுமணத்தை தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். “ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கை நடத்த ஆணும் பெண்ணும் உற்ற துணைவர்கள் ஆவார்கள் என்பதைக் குறிப்பதுதான் வாழ்க்கைத் துணை என்பதாகும். வாழ்க்கை என்பது சுதந்திர இன்ப வாழ்க்கையே அன்றி கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட துன்ப வாழ்க்கையல்ல” என்கிறார் பெரியார்.

மேலும் அவர், “ உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனே ஆயினும் தன் மனைவி இறந்துபட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் வனப்பு மிகுந்த எழில் கொழிக்கும் இளநங்கை ஒருத்தியை தேர்ந்தெடுக்கிறான்.

ஆயின் ஒரு இளம்பெண் தன் கொழுநனை இழந்துவிட்டால் (கொழுநன் இறந்துவிட்டால் என பெரியார் சொல்லுகிறார்) அவள் உலக இன்பத்தையே துய்க்காதவளாக இருப்பினும் அவள் தன் ஆயுட்காலம் முழுதும் இயற்கைக்குக் கட்புலனை இறுக்க மூடி மனம் நொந்து வருந்தி, மடிய நிபந்தனை ஏற்பட்டு விடுகின்றது... இஃது என்ன அநியாயம்?” என்று கேட்கிறார் பெரியார்.

பெரியாரின் இந்தக் கேள்விக்கு எத்தனையோ அமைப்புகள், தனி நபர்கள் மறுமணம் மூலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் இந்த சமூகத்தின் காதுகளிலும், கண்களிலும் புலப்படுவது கிடையாது. புலப்பட்டாலும் அது பொதுமைச் செய்தியாக ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுவது கிடையாது.

ஆயின் அதையே ரஜினி போன்ற ஆன்மீக அரசியலாளர்கள் செய்யும்போது பெரியாரின் சமூகவியல் வழியில்தான் ரஜினியும் பயணம் செய்கிறார் என்பதை சுட்டிக்காட்டி பாராட்ட வேண்டியது அவசியமாகிறது. இது பெரியாருக்கான பாராட்டு கிடையாது. ரஜினிக்கான பாராட்டுதான்.

ரஜினி தன் மகளின் மறுமணத்தை காதும் காதும் வைத்த மாதிரி திருப்பதியிலோ ரிஷிகேஷிலோ சில நிமிடங்களில் முடித்திருக்க முடியும். ஆனால் ஊரைக் கூட்டி செயற்கைக் கோள் சேனல்களைக் கூட்டி முதலமைச்சர் முதல் அனைத்து பெரிய இடத்து மனிதர்களையும் நேர் சென்று அழைத்து விழாக்கோலம் பூண வைத்து நடத்துவது என்பது ரஜினியின் மிகப்பெரிய உளவியல் மாற்றம். பெரியார் அன்று பல்வேறு கூட்டங்களில் விதைத்ததுதான் இன்று போயஸ் தோட்டத்திலும் விளைந்திருக்கிறது.

“சமூகத்தில் மறுமணம் என்றாலே அச்சப்பட்டு இரகசியமாகவோ அல்லது ஏளனங்களுக்கு எளிமையாகவோ செய்யவேண்டும் என்ற நிலை. அதுவும் ஒரு பெண்ணின் இரண்டாம் திருமணம்தான் கொண்டாட்டத்தோடு செய்யவேண்டுமா....? என்ற கேள்வி. புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. மனுஷிகளுக்கும் அமைதியான ஏற்ற வாழ்க்கையும் உரிமைதான்! காலத்துகேற்ற நல்ல ஆரோக்கியமான மாற்றங்கள் தேவை.

பெண்கள் மறுமணம் தவறில்லை. தாலி கட்டிவிட்டாலே 'அதுதான் வாழ்க்கை என அனைத்தையும் பொறுத்து வாழவேண்டுமா? வாழ்த்துகள் ரஜினிகாந்த்” என்று கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் ஃபேஸ்புக்கில் பாராட்டுகிறார்.

பல இளம்பெண்கள் ரஜினியை சௌந்தர்யாவின் மறுமணத்துக்காக, அதை இவ்வளவு விமரிசையாக நடத்தியதற்காக தங்கள் அப்பா ஸ்தானத்தில் வைத்து கொண்டாடுகிறார்கள். பல ’சிங்கிள் மதர்’கள் ரஜினியைக் குறிப்பிட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறார்கள்.

ரஜினி எத்தனையோ சினிமாக்கள் மூலம் மெசேஜ் கொடுத்திருக்கிறார். சில தேர்தல் களங்களில் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அவற்றையெல்லாம் கடந்து தன் மகள் சௌந்தர்யாவின் திருமணம் மூலம் அவர் தமிழ்ச் சமூகத்துக்காக வெளிப்படுத்தியிருக்கும் செய்தி மகத்தானது. வாழ்த்துகள் ரஜினிக்கும், மண மக்களுக்கும் மட்டுமல்ல... ’என்றோ நடக்கும் அது என் பெயர் சொல்லாமலே நடக்கும்’ என்பதை அறிந்தும் தளராமல் சொல்லிச் சென்ற அந்த சமூக மருத்துவர் பெரியாருக்கும்!

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon