மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

தம்பிதுரை பேச்சில் தவறில்லை: சட்டமன்றத்தில் ஜெயக்குமார்

தம்பிதுரை பேச்சில் தவறில்லை: சட்டமன்றத்தில்   ஜெயக்குமார்

மத்திய பாஜக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டதாக மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளருமான தம்பிதுரை நேற்று (பிப்ரவரி 11) கடுமையான புகார் பட்டியல் வாசித்திருந்தார். இந்நிலையில் மக்களவையில் தம்பிதுரை பேசியதில் தவறில்லை என இன்று பிப்ரவரி 12 சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருக்கிறார்.

பேட்டிகள், பொதுநிகழ்ச்சிகளில் பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து வரும் தம்பிதுரை பட்ஜெட் மீதான விவாதத்தின் போது நேற்று நாடாளுமன்ற மக்களவையில் அதிமுக சார்பாக பேசினார். அப்போது ஜிஎஸ்டி, தூய்மை இந்தியா, பணமதிப்பழிப்பு, மேக் இன் இந்தியா என பாஜக அரசின் ஒவ்வொரு திட்டம் தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இதுபற்றி பாஜக அரசின் தோல்விகள்; பட்டியலிட்ட தம்பிதுரை என்ற தலைப்பில் விரிவான செய்தியை மின்னம்பலத்தில் நேற்று வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் பொன்முடி, ‘நேற்று அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது பல்வேறு புகார்களைச் சொல்லியிருக்கிறார். இது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்தா? அல்லது அரசின் கருத்தா?” என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “ஒரு திட்டத்தால் மாநிலங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநிலங்களின் கடமையாகிறது. அந்த வகையில் தம்பிதுரையின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

தம்பிதுரையின் நேற்றைய பேச்சு ஆதாரங்கள் இல்லாமல் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டும் வகையில் அமைந்துள்ளது என்று பாஜக தரப்பில் நேற்று மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று சட்டமன்றத்திலேயே தம்பிதுரை பேச்சில் தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருப்பது பாஜகவுடனான அதிமுக கூட்டணி பற்றிய யூகங்களுக்கு வெடி வைப்பது போல் இருக்கிறது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon