மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 17 நவ 2019

சிபிஐ விசாரணையில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம்!

சிபிஐ விசாரணையில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம்!

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் ரூ.30,000 முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக ஆவணங்களை அழித்ததாகவும், விசாரணைக்கு கொல்கத்தா காவல் ஆணையர் ஒத்துழைப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மூன்று நாட்களாக ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். அதுபோன்று திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. குணால் கோஷும் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.

இதற்கிடையே, “இவ்வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கடந்த நான்கு ஆண்டுகளாக விசாரித்து வருகின்றன. அவர்கள் விசாரணையில் நம்பிக்கை இல்லை” என அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரி அவர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நேற்று (பிப்ரவரி 11) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி சாரதா நிதி நிறுவன பங்குதாரர்களின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon