மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

மத்திய சென்னை: தயாநிதியை எதிர்த்து கோகுல இந்திரா

மத்திய சென்னை: தயாநிதியை எதிர்த்து கோகுல இந்திரா

வருகிற மக்களவைத் தேர்தலில் சென்னையின் ஸ்டார் வேட்பாளர்கள் யார் யார் என்ற கேள்விகள் எல்லார் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. திமுக சார்பில் மத்திய சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனே மீண்டும் நிறுத்தப்படுவார் என்பதே இப்போது வரையிலான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதிமுக- பாஜக கூட்டணி ஒருவேளை உருவானால் தென் சென்னைதான் பாஜகவுக்குப் போகும். எனவே மத்திய சென்னை மீண்டும் அதிமுகவுக்குதான் என்ற பேச்சு அக்கட்சியினரிடத்தில் இருக்கிறது. இதன் விளைவாக மத்திய சென்னை யாருக்கு என்ற போட்டியும் தொடங்கியிருக்கிறது.

இப்போது எம்.பி.யாக இருக்கும் விஜயகுமாரை மத்திய சென்னை தொகுதி மக்கள் பார்த்து வெகுநாட்கள் ஆகிறது என்பதே நிலைமை. இதனால் மீண்டும் விஜயகுமாருக்கே வாய்ப்பு வழங்க வேண்டுமா என்பது குறித்தும் சந்தேகம் நிலவுகிறது. இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சரான கோகுல இந்திரா மத்திய சென்னையைக் குறிவைத்து தீவிரமாக களமாடத் தொடங்கியிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான கோகுல இந்திரா கடந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணா நகர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். பன்னீரிடம் தனக்கு மத்திய சென்னை தொகுதி வேண்டும் என்று கோகுல இந்திரா கேட்டதாகவும், அதற்கு பன்னீரும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகவும் அதிமுகவில் பேசுகிறார்கள்.

இதையடுத்து கோகுல இந்திரா தனக்கு நெருக்கமான நண்பர்களிடமும், தான் சார்ந்திருக்கும் சமுதாய அமைப்புகளிடமும் இதை எடுத்துச் சொல்லி மத்திய சென்னையில் போட்டியிடுவது வெற்றிபெறுவது குறித்து இப்போதே ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon