மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

நில அதிர்வு: சுனாமி எச்சரிக்கை இல்லை!

 நில அதிர்வு: சுனாமி எச்சரிக்கை இல்லை!

சென்னை அருகே ஏற்பட்ட நில அதிர்வு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

இன்று (பிப்ரவரி 12) காலையில் சென்னை அருகே கடலுக்கு அடியில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளி அளவில் பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “இன்று காலை இந்திய நேரப்படி 7.02 மணியளவில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், சென்னைக்கு கிழக்கே வடகிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட் பிளேர் ஆகிய பகுதிகளில் உள்ள நிலநடுக்கப் பதிவு கருவிகளில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. முதல் தகவல் அடிப்படையில் இந்த விவரங்கள் மட்டுமே வந்துள்ளன. கூடுதல் தகவல்கள் மேற்கொண்டு வரும். இந்த நில அதிர்வானது நிலப்பகுதியில் அல்லாமல், கடற்பகுதியில் ஏற்பட்டதால் எந்த பாதிப்பும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

இந்த நில அதிர்வு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ளார். அதில், நில அதிர்வின் மையப்பகுதி சென்னையில் இல்லை என்றும், சென்னையிலிருந்து வெகுதொலைவில்தான் இதன் மையப்பகுதி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். “இந்த நில அதிர்வால் எந்த சேதமும் ஏற்பட வாய்ப்பில்லை. மக்கள் அச்சமுறத் தேவையில்லை. வதந்திகளை நம்பாதீர்கள், பரப்பாதீர்கள். ஏற்கெனவே இந்த மண்டலத்தில் மூன்று முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதை விடக் கடுமையான நில அதிர்வு இதே பகுதியில் 1999ஆம் ஆண்டில் ஏற்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon