மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

சட்டமன்றத்தில் சின்னதம்பி!

சட்டமன்றத்தில் சின்னதம்பி!

சின்னதம்பி குறித்து தமிழகச் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

கோவை மாவட்ட மக்கள் கூறிய புகாரின் பேரில் பிடிக்கப்பட்டு, கடந்த மாதம் டாப்ஸ்லிப் காட்டுக்குள் விடப்பட்டது சின்னதம்பி யானை. கடந்த 31ஆம் தேதியன்று பொள்ளாச்சி அருகேயுள்ள அங்கலக்குறிச்சிக்குள் நுழைந்தது இந்த யானை. இதையடுத்து இதனை மீண்டும் காட்டுக்குள் அனுப்ப முயற்சித்து வருகிறது தமிழக வனத் துறை. கும்கி யானைகளைப் பயன்படுத்தியும் கூட, நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், சின்னதம்பி யானையை யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது தமிழக வனத் துறை.

இதன் தொடர்ச்சியாக, இன்று (பிப்ரவரி 12) பிற்பகல் விலங்கு நல ஆர்வலர்கள் அருண் பிரசன்னா, முரளிதரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு விசாரணை பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நாளை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தலைமை வழக்கறிஞரின் முறையீட்டை ஏற்று, இந்த வழக்கு விசாரணையை நாளை வரை ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய நீதிபதிகள், சின்னதம்பி யானைக்கு இயற்கை உணவுகளைக் கொடுத்துப் பழகி, ஏன் மீண்டும் அதனைக் காட்டிற்குள் அனுப்பக் கூடாது என்று கேள்வியெழுப்பினர். சின்னதம்பியின் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

திண்டுக்கல் சீனிவாசன் பதில்

இன்று சட்டமன்றத்தில், சின்னதம்பி குறித்து தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேள்வி எழுப்பினார் காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி. இதற்குப் பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், சின்னதம்பி யானை தினசரிக் கதாநாயகனாக இருப்பதாகவும், மிருகங்களைத் துன்புறுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை எனவும் தெரிவித்தார். “மிருகங்களிடம் இருந்து மனிதர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடம் இருந்து மிருகங்களைக் காப்பாற்றத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். சின்னதம்பி குறித்து உயர் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம். தீர்ப்பு வந்தவுடன் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் பதில் தெரிவித்தார்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon