மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

பெரியவர்கள் ஏன் மழையில் நனைவதில்லை?

இயற்கையின் பேரழகுகளிலும் பெருங்கொடைகளிலும் ஒன்றான மழையை யாருக்குத்தான் பிடிக்காது? நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரி பெய்யும் மழையில் நனைய வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது.

அனைவருக்குமே கொட்டும் மழையில் மொட்டை மாடியில் நனைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். சின்ன வயதில், தலையில் விழுந்து நேர்கோட்டில் பயணித்து நம் உதட்டில் படும் அந்த மழைநீரைக் குடிக்காமல் விட்டதில்லை. மழை குறித்த இதுபோன்று பல அனுபவங்கள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும்.

ஆனால், ஏன் இந்த அனுபவங்கள் எல்லாம் இளம் வயதோடு உறைந்து போய்விடுகின்றன. பெரியவர்கள் யாராவது மழையில் ஆனந்தமாக நனைகிறார்களா? முகத்தில் வழியும் மழைநீரைச் சுவைக்கிறார்களா? மழை என்றதும் பெரியவர்கள் அதிலிருந்து தப்ப என்ன வழி என்று ஏன் பதறுகிறார்கள்?

பெண்கள் மழையில் நனைய வேண்டும் என்று நினைக்கிறபோது, குடும்பத்தினர் அதைத் தடுத்துவிடுகிறார்கள்.

ஒருவேளை சிலருக்கு இந்தச் சுதந்திரம் கிடைத்தாலும், மழையில் நனைந்தால் முடி கொட்டிவிடும், ஜலதோஷம் பிடித்துவிடும் என்ற எண்ணங்களால் அந்த ஆசை தடைப்பட்டுப் போய்விடுகிறது. ஆனால், ஆண்களுக்குப் பெரிதாக எந்தத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே மழையில் குளித்தாலும் தலைமுடி விரைவில் உலர்ந்து விடும் என்பதால் அவர்களுக்கு இது மறுக்கப்பட்டதில்லை. ஆனால், எத்தனை ஆண்கள் இந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்?

தூய்மையான மழைநீரில் குளிக்கும்போது கிடைக்கும் அனுபவத்தை வார்த்தைகளால் கூற முடியாது. ஒரு சிலர் மழையில் நனையும்போது எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், அது எல்லாம் மறைந்துபோய் மனது மிக லேசாக மாறிவிடும். மழையில் நனைதல் என்பது மனதுக்கு அளிக்கும் ஒருவிதப் பயிற்சியும்கூட.

மழை என்பது உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் குளிர்வித்து, தூய்மைப்படுத்தி, லேசாக்கிவிட்டுச் செல்லும்.

மழையில் நனைதல் என்பது வெறுமனே நனைவதில்லை. அது சுதந்திரம்; தியானம்.

நீங்கள் சுதந்திரமாக தியானம் செய்ய விரும்புகிறீர்களா?

- சா.வினிதா

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon