மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த அம்பானி

ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த அம்பானி

இந்தியாவின் முதன்மை பணக்காரரும், மிகப்பெரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தனது மகன் திருமணத்துக்காக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் மார்ச் 9ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. இவர்களது திருமணம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே நிச்சயிக்கப்பட்டது. 3 நாள் நிகழ்ச்சியாக மிகக் கோலாகலமாக தனது மகன் திருமணத்தை நடத்த அம்பானி திட்டமிட்டுள்ளார். ஷ்லோகா ஆகாஷ் அம்பானியின் குழந்தைப்பருவம் முதல் நண்பராக இருந்தவர். இவர் வைர வியாபாரியான ரஸ்ஸெல் மேத்தாவின் மகளாவார்.

இவர்களுடைய திருமணத்துக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலினை அழைக்க முகேஷ் அம்பானியும், அவரது மனைவியுமான நீடா அம்பானியும் நேற்று (பிப்ரவரி 11) சென்னையில் உள்ள ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் வந்தனர். திமுக தலைவர் ஸ்டாலினையும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினையும் ஆகாஷ் அம்பானியின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பிதழை வழங்கியுள்ளார். இந்தப் புகைப்படங்களை ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும் ஆனந்த் பிரமாலுக்கும் திருமணம் நடந்த நிலையில், தனது மகன் திருமணத்தையும் குறுகிய கால இடைவெளியில் அம்பானி நடத்துகிறார். இஷா அம்பானியின் திருமண நிகழ்வில் ஹிலாரி கிளிண்டன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேனகா காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக் கான், அமீர் கான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon