இன்று அதிகாலை நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் கரோல் பாக் என்ற இடத்தில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று 150க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். திடீரென்று இன்று (பிப்ரவரி 12) காலை 4.30 மணியளவில் இந்த ஹோட்டலின் ஒரு பக்கத்தில் தீப்பிடித்தது. தூங்கிக் கொண்டிருந்ததால், பெரும்பாலானவர்களால் இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியவில்லை. இதனால், 17 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். சிலர் மாடியிலிருந்து குதித்துத் தப்பிக்க முயன்றதில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, 26 தீயணைப்பு வாகனங்கள் அங்கு அழைக்கப்பட்டன; அவை தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. மூன்று மணி நேரப் போராட்டத்துக்குப் பின்பு, காலை 7 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இதுவரை 45 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மூன்று பேரைக் காணவில்லை என போலீசார் கூறுகின்றனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ராம் மனோகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இந்தாண்டில் மட்டும், டெல்லியில் இரண்டு பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நொய்டா மெட்ரோ மருத்துவமனையிலும், ஜனவரி 30ஆம் தேதி ஒக்லா பகுதியில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையொன்றிலும் தீ விபத்து ஏற்பட்டது.