மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

60 நாள்களில் உருவான ‘மாமனிதன்’!

60 நாள்களில் உருவான  ‘மாமனிதன்’!

விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் ஆறு படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றிய விஜய்சேதுபதி தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துமுடித்துள்ளார். அப்படத்தின் பணிகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. தனது ஆரம்பக்கால வளர்ச்சியில் உடனிருந்தவர்கள், நம்பிக்கைக்குரிய இயக்குநர்கள் படங்களுக்கு கால்ஷீட்டை மறுக்காமல் வழங்கும் விஜய்சேதுபதி சீனு ராமசாமி அழைக்க மாமனிதன் படத்தில் இணைந்தார்.

ஏற்கெனவே தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் இணைந்த இக்கூட்டணி மாமனிதன் படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. இரு மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.

ஆண்டிப்பட்டி, இராமேஸ்வரம், கேரளா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்திய படக்குழுவினர் வாரணாசியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை மேற்கொண்டனர். இன்று காலை வாரணாசியில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். “ எமது குழுவின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பால் இது சாத்தியமானது. இசைஞானியின் பின்னணி இசையையும், பாடல்களையும் கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன். விரைவில் டப்பிங் பணிகள் ஆரம்பமாக உள்ளது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் அவர் நண்பராக நடிக்கும் குரு சோமசுந்தரம் இஸ்லாமியராகவும் வலம்வருகின்றனர். காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் தயாரிக்கிறது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon