மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உருவப்படம்!

நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உருவப்படம்!

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்துவைத்தார்.

முன்னாள் பிரதமரும், பாஜகவின் நிறுவனர்களில் ஒருவருமான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வாஜ்பாயின் உருவப்படத்தை நாடாளுமன்றத்தில் திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (பிப்ரவரி 12) திறந்துவைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “வாஜ்பாய் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். அவருடைய அரசியல் வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி எதிர்க்கட்சி வரிசையிலேயே கழிந்தது. இருப்பினும் அவர் பொதுமக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தன்னுடைய சித்தாந்தத்திலிருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை” என்று புகழாரம் சூட்டினார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது, “வாஜ்பாய் எப்போதும் நினைவுகூறப்படுவார். ஏனெனில் எதிர்க்கட்சிகள் மீது அவர் விமர்சனங்களை வைத்துள்ளார். ஆனால் ஒருபோதும் அவரது இதயத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கோபம் இருந்ததில்லை” என்று புகழ்ந்தார்.

வாஜ்பாய், கடந்த 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி குவாலியரில் பிறந்தார். 10 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்துள்ள அவர், ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். அவருக்கு 2015ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரை பெருமைப்படுத்தும் விதமாக தற்போது நாடாளுமன்றத்தில் அவரது உருவப்படம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon