மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

PUBG: இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தும் எதிர்காலம்!

PUBG: இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தும் எதிர்காலம்!

சிவா

ஒரு விளையாட்டுத் தொடர்

PUBG கேம் இந்தியாவில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைப் பற்றிப் பேசுவோம் என்று கூறி கடந்த பாகத்தை நிறுத்தியிருந்தேன். PC, PS4, XBOX மற்றும் Mobile ஆகிய நான்கு டிவைஸ்களில் விளையாடப்படும் PUBG கேமில் எதை முன்வைத்து இந்தக் கட்டுரையைத் தொடர்வது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. ஆனால், எதில் இந்தியர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர் என்று பார்க்கும்போது, மொபைலை அடிப்படையாக வைத்தே தொடர்வது என முடிவெடுத்தேன். அதற்குக் காரணம், இந்தியாவின் மொத்த இண்டர்நெட் பயன்பாட்டில் 80% ஸ்மார்ட்ஃபோன்கள் மூலமாகவே கரைகின்றன. கம்ப்யூட்டர் பாகங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் ஸ்மார்ட்ஃபோன்களே PUBGயை அதிகளவில் கொண்டு சென்றிருப்பதும் தெரியவருவதால் இதை அடிப்படையாக வைத்தே தொடர்வது நல்லது. இந்தியாவில் PUBG வேகமாகப் பரவக் காரணமாக இருந்தது, மற்ற கேம்களை விட இது சுவாரசியமாக இருப்பது என்று ஜனா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

PUBG சுவாரசியத்தின் அடிப்படை சாராம்சம் ஒருவரைக் கொன்று தனது வெற்றியை நிலைநிறுத்துவதல்ல. தனியாகவோ, ஒரு அணியாகவே கடைசி வரை உயிருடன் இருத்தல். சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் என்பார்களே அதுபோல. PUBG கேமின் கடைசி சில நொடிகளில் இரண்டு பேர் மட்டும் உயிருடன் இருக்கும் சூழலில், தான் எங்கிருக்கிறோம் என எதிரி அறியாதபோது, எதிரியைக் கொன்று வெற்றியடைவதற்கும், தனது உயிரைத் தக்கவைத்துக்கொள்ள பதுங்கியே இருப்பதும் ஒரு கேமரின் தனி மனநிலையைப் பொறுத்தது. ஒருவரது இயல்பைப் பொறுத்தே அவரது திறமையை வெளிப்படுத்தும் விதமும் அமையும். ‘அவர் நல்ல திறமைசாலி. ஆனால், கொஞ்சம் Shy டைப். அதிகமா வெட்கப்படுறதால திறமையை வெளிக்காட்ட முடியாமல் போச்சு’ என்பார்களே அதுதான். ஆக்ரோஷமான விளையாட்டுகளில் ஈடுபட்டுவந்த ஒருவர் PUBG விளையாடும்போது அவர் ஒருவரைக் கண்டதும் கொல்ல நினைப்பதும், பல வருடங்களாக கேமர்களாக இருக்கும் ஒருவர், ஒருவரைக் கொல்லத் தேவையான காரணம் அமையும்போது மட்டுமே அந்த உயிரை எடுப்பதும் தான் இதில் உள்ள வித்தியாசம். இப்படி இரண்டுவிதமான கேமர்களும் ஆசிய சர்வரில் சரிசமமாக இருப்பதாலேயே, அது மிகக் கடினமானதாக கருதப்படுகிறது. சர்வர்கள் என்றால் என்ன?

PUBG கேமினைப் பொறுத்தவரையில் ஐந்து சர்வர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாடுகள் இடம்பெற்றிருக்கும் இடங்களைப் பொறுத்து அவை இவற்றில் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தியா இடம்பெற்றிருக்கும் ஆசிய சர்வரில் விளையாடுபவர்களில் 70 சதவிகிதம் பேர் இந்தியர்கள். Asia, Europe, KRJP, North America, South America என அவை வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் மிக கடினமான சர்வர் என்றால் அது ஆசியா சர்வர் தான். மற்ற சர்வர்களில் டாப் 10 இடங்களில் இருக்கும் கேமர்கள்கூட, ஆசியா சர்வரில் வெல்ல முடியாமல் போவது சாத்தியம். அதிகமான கேமர்களின் பங்களிப்பினால், அதிகமான ஆட்டங்களை விளையாடி பல திறமையான கேமர்களை உருவாக்கி வைத்திருக்கிறது இந்திய கேமிங் சமூகம். ஆனால், தாங்கள் விளையாடும் விளையாட்டை எப்படி ரெகார்ட் செய்து, எப்படி சமூக வலைதளங்களில் அப்லோடு செய்வது என்பது பலருக்கும் தெரியாமல் இருப்பதால் அவர்கள் விளையாடுவதில் மட்டுமே நேரம் செலவிடுகின்றனர். மொத்த PUBG கேமர்களில் 24% நபர்கள் 8 மணிநேரத்துக்கும் மேலாக PUBG விளையாடுகின்றனர். இவ்வளவு திறமை இருந்தும், நேரம் செலவு செய்தும் இந்தியாவின் பெயர் ஏன் மேற்குலக நாடுகளில் எதிரொலிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறதா?

பல பேட்டல் ராயல் கேம்களைப்போலவே PUBGயிலும், சொந்த அணியினர் மற்றும் இதர அணியைச் சேர்ந்தவர்களுடன் பேசக்கூடிய வசதி இருக்கிறது. அந்த வசதியை, தங்களது வளர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல் இருப்பதே பெரும்பாலான இந்திய கேமர்களின் தவறாக இருக்கிறது. PUBG கேம் தொடங்கியதுமே, இந்திய மொழிகளில்(பெரும்பாலும் இந்தி பேசுபவர்கள்) கத்திக்கொண்டே இருப்பார்கள். பெரும்பாலான சமயங்களில் அவர்களுக்குப் பிடித்த இந்தி பாடல்களை சத்தமாக வைத்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். இது ஹெட்செட் போட்டு PUBG விளையாடுபவர்களின் காது ஜவ்வுகளைப் பதம்பார்த்துவிடும். அதுபோலவே, ஹெட்செட் போடாமல் விளையாடுபவர்கள் ஸ்மார்ட்ஃபோனிலிருந்தும் அதிக சத்தத்தை வெளியேற்றி, அங்கிருப்பவர்களின் பார்வையை கேமரை நோக்கித் திருப்பும். இதுபோன்ற காரணங்களாலேயே மற்ற நாட்டைச் சேர்ந்த பிளேயர்கள் ஆசிய சர்வருக்குள் வரமாட்டார்கள். இதனால், இந்திய கேமிங் என்பது ஆசியாவிற்குள்ளாக மட்டுமாக சுருங்கிவிடுகிறது. திறமை மட்டுமே PUBG போன்ற கேம்களை இந்தியாவை நோக்கி இழுக்கின்றதா என்றால், இல்லை. வீடியோகேம் என்பது வெளியில் பேசும்போது கேமிங் சமூகத்துக்காக உருவாக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டது என்று எவ்வளவோ சொன்னாலும், அது முழுக்க முழுக்க வியாபாரத்தையே சார்ந்திருக்கிறது. அந்த வியாபாரம் தான் மற்றவர்களை இதைநோக்கி இழுத்து வருகிறது. அப்படித்தான், இந்திய PUBG கேமர்களில் 90 சதவிகிதம் பேரை ஒரு மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யவைக்கிறது. ஆச்சர்யமாக இருக்கிறதா? அடுத்த பகுதியில் ஆச்சர்யம் அலசப்படும்.

விளையாட்டு தொடரும்...

குறிப்பு: செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்தத் தொடர் வெளியாகும்.

முந்தய பகுதி

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon