மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 மே 2020

நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

பாலியல் வன்கொடுமை குறித்து விசாரித்து வந்த சிபிஐ அதிகாரியை இடம் மாற்றம் செய்ததாக சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

பிகாரில் முசாபர்பூர் நகரில் உள்ள காப்பகங்களில் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட புகார் தொடர்பாக, இணை இயக்குநர் ஏ.கே.சர்மா தலைமையிலான குழு விசாரித்து வந்தது. இதனிடையே, சிபிஐ இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்ற நாகேஸ்வர ராவ், ஏ.கே.சர்மாவை மத்திய ரிசர்வ் காவல் படைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதுதொடர்பான வழக்கு கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பிகார் சிறார் காப்பக பாலியல் வன்முறை வழக்கை விசாரணை செய்யும் எந்த அதிகாரியையும் பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற அனுமதி இல்லாமல் சர்மாவை, நாகேஷ்வர ராவ் பணியிட மாற்றம் செய்துள்ளார் என்று குறிப்பிட்டு இதுதொடர்பாக பிப்ரவரி 12ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவோடு விளையாடினால் கடவுள் தான் உங்களை (நாகேஷ்வர ராவ்) காப்பாற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று (பிப்ரவரி 11) நாகேஸ்வர ராவ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது. அவர் தாக்கல் செய்த பதில் மனுவில் தனது தவறை புரிந்து கொண்டேன், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன், நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற உள்நோக்கமோ, விருப்பமோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தலைமை நீதிபதி முன்பு இன்று (பிப்ரவரி 12) நாகேஸ்வர ராவ் ஆஜரானார். அப்போது அவர் கோரிய மன்னிப்பு நிராகரிக்கப்பட்டது.

அவரது சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ”தான் வேண்டுமென்றே தவறை செய்யவில்லை என்று நாகேஷ்வர ராவ் கூறுகிறார். எனவே இவ்விவகாரத்தில் பகிரங்க மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்” என்று வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, நாகேஷ்வர ராவ் நீதிமன்ற அவமதிப்பு செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது என்று கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, இன்று முழுவதும் நீதிமன்ற அறையை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon