மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஏப் 2020

பாளை. சிறையில் போலீசார் சோதனை!

பாளை. சிறையில் போலீசார் சோதனை!

பாளையங்கோட்டை மத்தியச் சிறைச்சாலையில் கைதிகள் இடையே போதைப்பொருட்கள் பயன்பாடு உள்ளதா என போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர்.

கடந்த ஆண்டு சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதாகப் புகார் எழுந்தது. அப்போது புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தமிழகத்திலுள்ள சிறைகளில் சோதனைகள் மேற்கொண்டனர் போலீசார். இதன் தொடர்ச்சியாக, அவ்வப்போது சிறைகளில் போலீசார் சோதனையிடுவது தொடர்கிறது.

இன்று (பிப்ரவரி 12) காலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் திடீரென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இந்த சிறையில் தங்கு தடையின்றி பீடி, கஞ்சா, புகையிலை போன்ற பொருட்கள் கிடைப்பதாகப் புகார் எழுந்ததன் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டது.

பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் பரமசிவன் தலைமையில், 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் இதில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் போதைப் பொருட்கள், செல்போன்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இரண்டு சிறிய கூர்மையான பொருட்கள் மட்டுமே கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon