கன்னியாகுமரி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஜனவரி 27ஆம் தேதி மதுரையில் நடந்த எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துகொண்டார். அதன்பிறகு பிப்ரவரி 10ஆம் தேதி திருப்பூரில் நடந்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் துவக்க விழா பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். மோடியைப் போலவே பாஜக மூத்த தலைவர்கள் சிலரும் தமிழகப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.
இதனையடுத்து கன்னியாகுமரியில் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மோடியின் குமரி வருகை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 19ஆம் தேதிக்குப் பதிலாக மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வரவுள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை பாஜக மிரட்டவில்லை
பிப்ரவரி 10ஆம் தேதி திருப்பூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சென்னை தாமஸ் மவுண்ட் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையை காணொளிக் காட்சி வழியாகப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதனையடுத்து நேற்று இரவு தமிழிசை சவுந்தராரஜன் மக்களோடு மக்களாக இந்தப் புதிய மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக மிரட்டவில்லை. திமுக, காங்கிரஸ் அல்லாத எல்லாக் கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இயல்பாகத்தான் நடந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்பதை பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன் விரைவில் அறிவிப்போம். பாஜக பிரம்மாண்ட கூட்டணியை தமிழகத்தில் அமைக்கும்” என்றார்.
திமுகதான் காங்கிரஸை மிரட்டி வருகிறது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார். ”கமல்ஹாசனை அழைத்து அருகில் அமரவைத்துக்கொண்டே, மற்றொருபக்கம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை வைத்துக்கொண்டு கமலஹாசனுக்கு எதிராக திமுக பேசவைக்கிறது. அதிகாரத்தைப் பயன்படுத்தி கூட்டணியில் இருக்கும் காங்கிரஸை ஸ்டாலின் மிரட்டுகிறார். திருப்பூர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடவில்லை என்று தேவையற்ற குற்றச்சாட்டை ஸ்டாலின் முன்வைக்கிறார்” என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரித்தார்.