எதிர்பாராத சம்பவங்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது
தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் சட்டத்தின்படி, எதிர்பாராத சம்பவங்களில் உயிரிழப்போருக்கு ரூ.3 லட்சமும், 80 சதவிகிதக் காயம் இருந்தால் ரூ. 2 லட்சமும் வழங்கப்படும். 50 சதவிகிதக் காயம் இருந்தால் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோருக்கு 3.5 லட்சம் ரூபாயும், பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவர்களுக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
ஆள்கடத்தலின் போது மனஉளைச்சலுக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தால் அந்த புகார் சட்டப் பணிகள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
இது தொடர்பாக காவல் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், சட்டப் பணிகள் ஆணையக் குழுத் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய 4 நபர்கள் கொண்ட குழு அந்த புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உள் துறைச் செயலாளருக்குப் பரிந்துரை செய்யும். அந்த பரிந்துரையின்படி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்படும். இதன் அடிப்படையிலேயே திருநங்கை தாரா, அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு தலைவர் ஜெயந்தி கூறுகையில், “இந்த இழப்பீடுகள் வழங்குவது தொடர்பான சட்டம் குறித்துபொதுமக்களுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்த சட்டத்தின் அடிப்படையில் சட்டப் பணிகள் ஆணையக் குழுவை அணுகினால் அவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும்” என்று தெரிவித்தார்.