மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

படகில் ட்ரான்ஸ்பாண்டர்கள்: அதிக மானியம் வழங்க அறிவுரை!

படகில் ட்ரான்ஸ்பாண்டர்கள்: அதிக மானியம் வழங்க அறிவுரை!

கடலில் மீனவர்கள் எல்லை தாண்டுவதைத் தடுக்கப் படகுகளில் பொருத்தும் ட்ரான்ஸ்பாண்டர்களுக்கு அதிகபட்ச மானியம் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்து மத்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை அணுக உத்தரவிடக் கோரி, மீனவ சங்கத் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே நடந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருப்பதை உறுதி செய்யப் படகுகளில் ட்ரான்ஸ்பாண்டர் கருவி பொருத்துவது குறித்துப் பதிலளிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 11) நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “சென்னை, கடலூர், நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் உள்ள மீனவப் படகுகளில் 500 ட்ரான்ஸ்பாண்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நாட்டிலே அதிக ட்ரான்ஸ்பாண்டர்கள் தமிழகத்தில்தான் பொருத்தப்பட்டுள்ளன. மீனவர்களுக்கு சாட்டிலைட் போன் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து விளக்கமளிக்கத் துறை சார்ந்த அதிகாரிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வரவுள்ளோம்” என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த மத்திய அரசு, மீனவர்களுக்கு சாட்டிலைட் போன் வழங்குவது குறித்து எந்தத் திட்டமும் இல்லை என்று தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு வழங்கியுள்ள ட்ரான்ஸ்பாண்டர் கருவிகளின் பேட்டரி 30 நிமிடங்களில் தீர்ந்துவிடும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தமிழகம் போன்ற மாநிலம் 500 ட்ரான்ஸ்பாண்டருக்குச் செலவிடுவது பெரிதல்ல என்று தெரிவித்தனர். ட்ரான்ஸ்பாண்டர் கருவிகளை வழங்குவதில் மீனவர்களுக்கு அதிகப்படியான மானியம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 20ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon