மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 17 நவ 2019

திரையரங்குகளில் வெளி உணவுக்கு அனுமதி மறுப்பு!

திரையரங்குகளில் வெளி உணவுக்கு அனுமதி மறுப்பு!

திரையரங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீரை வெளியிலிருந்து எடுத்துச் செல்ல அனுமதி கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 11) உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தாக்கல் செய்த மனுவில், “திரையரங்குகளுக்குச் செல்லும் பார்வையாளர்கள் குழந்தைகளுக்கான உணவு, குடிநீர் உட்பட எந்தப் பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. திரையரங்குகளில் உள்ள உணவகங்களில் கூடுதல் விலைக்கு உணவுகள் விற்கப்படுவதோடு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களே விற்பனை செய்யப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “திரையரங்குகளுக்கு வெளி உணவுகளை எடுத்துச் செல்வதை எந்தச் சட்டமும் தடை செய்யாத நிலையில், வீட்டில் இருந்து உணவுப்பொருட்களைத் தடுப்பது மனித உரிமை மீறிய செயல்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, “திரையரங்கங்கள் என்பது தனியார் நிறுவனம் என்பதால் அங்கு வெளியில் இருந்து உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு அனுமதி கேட்க எந்தச் சட்டத்திலும் உரிமை வழங்காத நிலையில், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது” எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon