மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

பணத்தைக் கையாள பட்ஜெட் போடு!

பணத்தைக் கையாள பட்ஜெட் போடு!வெற்றிநடை போடும் தமிழகம்

புதிய நிதிக் கதைகள் 15 – முருகேஷ் பாபு

“அப்பா… உங்க சம்பளம் எவ்ளோ?” முகிலின் குரல் கேட்டு நிமிர்ந்தார் குமார்.

நோட்டும் கையுமாக நின்றுகொண்டிருந்தான் முகில். அவனை இழுத்து சோபாவில் தன் பக்கத்தில் உட்கார வைத்தார்.

“என்னடா திடீர்னு?”

“எங்க மிஸ் கேட்டாங்க…”

“ஏன்? சம்பளம் எவ்ளோனு சொன்னா ஏழாங்கிளாஸ் ஃபீஸ்ல டிஸ்கவுன்ட் கொடுப்பாங்களாமா?”

முகில் ‘இல்லை' என்பது போல் தலையாட்டினான்.

“பிப்ரவரினா பட்ஜெட் மாதமாமே… கவர்ன்மென்ட் எல்லாம் பட்ஜெட் போடுவாங்களாமே… நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க.”

முகில் நோட்டை அப்பா எட்டிப் பார்க்க, டக்கென்று மறைத்துக்கொண்டான்.

“நோ சீட்டிங் டாடி…”

இரண்டு கைகளையும் உயர்த்தி, “சாரி சாரி” என்று சிரித்தார் குமார். முகில் தன்னை அட்ஜஸ்ட் செய்துகொண்டு நன்றாக உட்கார்ந்தான்.

“உங்க சாலரி..?”

“40,000”

எழுதியவன் நிமிர்ந்து, “நாலு சைபர்தானே டாடி?”

குமார் சிரித்தபடி செல்லமாக அவன் தலையில் தட்டினார்.

“மம்மி சாலரி?”

“அம்மா ஹோம்மேக்கர் தானேடா…”

“அய்யோ… இந்த கொஸ்டினுக்கு என்ன எழுத?”

“ஒரு கோடு போட்டு விட்டுருடா.”

“என்ன, என் பேச்சு அடிபடுது…” என்றபடி வந்தாள் சுகுணா.

“உனக்கு மாசம் எவ்ளோ சம்பளம்னு அவங்க மிஸ் கேட்டாங்களாம்..?”

“நான் இந்த வீட்ல பாக்கற வேலைக்கு எவ்ளோ சம்பளம் கொடுத்தாலும் போதாது” - அலுப்போடு சொன்னாள் சுகுணா.

குமார் சிரித்தபடி, “இது முகில் ஹோம்வொர்க். உன் பிரச்சினையை எழுதறதுக்கு இதுல இடம் இல்லை” என்றவர் முகில் பக்கம் திரும்பி, “நீ அடுத்த கேள்வியை வாசிடா” என்றார்.

“நம்ம வீடு ரென்ட் எவ்ளோ?”

“14,000”

“ஃபேமிலி எக்ஸ்பென்சஸ் எவ்ளோ?”

அம்மா குறுக்கே புகுந்து, “அது உங்க அப்பாவுக்கு எப்படி தெரியும்… கூடமாட கடைக்கு வந்திருந்தாதானே. 10,000 ரூபா போட்டுக்கோ.”

முகில் நிறுத்தி நிதானமாக எழுதினான். அதே வேகத்தில் நிமிர்ந்து, “அதர் எக்ஸ்பென்சஸ் வேற கேட்டுருக்காங்க… அதில என்ன எழுதறது..?”

“பெட்ரோல் செலவு, சினிமா, ஹோட்டல் போற செலவு எல்லாம் அதர் எக்ஸ்பென்சஸ்தான். அது 5,000 போட்டுக்கோ. அடுத்து?”

“அவ்ளோதான். டோட்டல் எக்ஸ்பென்சஸ் ஆட் பண்ணி இன்கம்ல இருந்து சப்ட்ராக்ட் பண்ணி போடணும்” என்றபடி கணக்கைப் போட்டான். மீதி 16,000 காட்டியது.

“ஓகே தேங்க்யூ” என்றபடி நோட்டை மூடினான். அப்பா அவனிடம் “கணக்க என்னன்னு முடிச்ச?” என்றார்.

“என்ன ஆன்சர் வருதோ அது உங்க ஃபேமலியோட சேவிங்ஸ்னு மிஸ் சொன்னங்க. நம்ம ஃபேமலி சேவிங்ஸ் 11,000”.

முகில் எழுந்து செல்ல, சுகுணா அலுப்போடு சாய்ந்து உட்கார்ந்தார். “ஏட்டு சுரைக்காய் ருசியாதான் இருக்கு. ஆனா, உண்மைல ஒண்ணும் மிஞ்ச மாட்டேங்குது.”

குமார் நிமிர்ந்து உட்கார்ந்தார். “முகில் எழுதுன கணக்கு பொத்தாம் பொதுவா இருக்கு. அதுல நாம காருக்கு கட்டுற ஈ.எம்.ஐயையோ பர்சனல் லோன் இன்ஸ்டால்மென்ட்டோ வரல… சீரியஸா ஒரு பட்ஜெட் போடுவோமா?” என்றபடி மனைவியை நிமிர்ந்து பார்க்க சுகுணாவும் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

பேப்பர் பேனாவை எடுத்து எழுத தொடங்கினார். ‘கார் லோன் 7,000, பர்சனல் லோன் 3,000’ என்று எழுதிவிட்டு இரண்டையும் கூட்டி 10,000 என்று எழுதிக்கொண்டார்.

“ஆக்சுவலி நம்ம சம்பளம் முப்பதாயிரம்தான். இதுக்குதான் பட்ஜெட் போடணும். போன மாசம் மளிகை வாங்குன சூப்பர் மார்க்கெட் பில் வெச்சிருக்கியா?” என்று கேட்க, சுகுணாவும் ஆர்வமாகப் போய் எடுத்து வந்தாள்.

பேனாவை மனைவியிடம் கொடுத்து, “இந்த மளிகை லிஸ்ட்ல எதெல்லாம் இந்த மாசம் தேவைபடாதுனு டிக் பண்ணு” என்றார்.

சுகுணா கடகடவென்று டிக் பண்ணிக் கொடுக்க வாங்கிப் பார்த்த குமார், “2,000 குறையுமா?” என்றார்.

சுகுணா, “தாராளமா குறையும். அதோட பொங்கல் அப்ப வாங்கின அரிசி, வெல்லம், காய்கறி, பழங்கள் செலவு இல்லைங்கறதால இன்னும் அதிகமாவே குறையும்” என்றாள்.

குமார் பேப்பரில் மளிகை என்றெழுதி அதற்கு நேரே 6,000 என்று எழுதினார்.

“அப்போ மளிகைக்கு 6,000 போட்டுக்குறேன். பால், காய்கறி, பழங்கள் 2,000 வருமா?” என்று கேட்க மனைவி தலையசைக்க, அதையும் குறித்துக்கொள்கிறார்.

“பெட்ரோல், மொபைல் ரீசார்ச் இதுக்கேல்லாம் 3,000 போட்டுக்குவோம்… ஹோட்டல், சினிமாவை இந்த மாசம் ஒதுக்கி வைப்போம்” என்று சொல்லிவிட்டு எல்லாவற்றையும் மொத்தமாகக் கூட்டினார்.

“ஆக மொத்த செலவுகூட வீட்டு வாடகையும் சேர்த்தா 35,000 வருது. இந்த மாசம் சேமிப்பு 5,000. அடுத்தடுத்த மாசங்கள்ல இதே அளவு மிச்சமானா அதை என்ன செய்யலாம்னு யோசிப்போம். பரவாயில்ல… இந்த முகில் பய பட்ஜெட்டு நம்மள கொஞ்சம் சுதாரிக்க வெச்சிருக்கு” என்றார்.

பட்ஜெட் - சில தகவல்கள்

வரவுகளை அறிந்துகொள்ளவும் செலவுகளைத் திட்டமிடவும் உதவும் கருவியே பட்ஜெட்.

எதிர்பாராத செலவுகளில் சிக்கிக்கொள்ளாமல் நம்மை இந்த பட்ஜெட் காப்பாற்றும்.

அரசாங்கங்கள் போடும் பட்ஜெட்டில் வேண்டுமானால் வரவு குறைவாகவும் செலவு அதிகமாகவும் இருக்கலாம். வீட்டு பட்ஜெட்டில் வரவுக்கு ஏற்ற செலவு இருப்பதே ஆரோக்கியமானது.

செலவுகளில் அவசியமானவற்றுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை தர வேண்டும்.

மாதத் தவணை அல்லது சீட்டு செலுத்துவது போன்றவற்றை இன்னும் எவ்வளவு காலம் தொடர வேண்டும் என்பதை பட்ஜெட்டிலேயே குறித்துக்கொண்டால் திட்டமிட எளிதாக இருக்கும்.

அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும் ஆடம்பரச் செலவுகளைத் தள்ளிபோடவும் பட்ஜெட் உதவும்.

பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற நீண்ட கால தேவைகளைக்கூட பட்ஜெட்டில் கணக்கில் கொள்ள வேண்டும்.

மாத பட்ஜெட்டைத் தெளிவாகத் திட்டமிடுவதன் மூலம் விலைவாசி மாற்றங்களை அறிந்துகொள்ள முடியும்.

வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியைச் சேமிக்கிறோமா என்பதைத் திட்டமிடல் இருந்தால்தான் அறிந்துகொள்ள முடியும்.

ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு என்பது பழமொழி. பணத்தைக் கையாள பட்ஜெட் போடு என்பது புதுமொழி.

“மொத்த லே அவுட்டும் நம்ம கையிலதான்! ”

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon