மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 3 ஏப் 2020

பாலியல் புகார் முருகன்: நீதிமன்றம் அதிருப்தி!

பாலியல் புகார் முருகன்:  நீதிமன்றம் அதிருப்தி!

லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி முருகனுக்கு எதிராகப் பெண் அதிகாரி அளித்த புகார் மீது ஆறு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐஜியாக இருக்கும் முருகனுக்கு எதிராக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்பி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி புகார் கொடுத்திருந்தார். சில மாதங்களாகப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும் இதுகுறித்துப் பல்வேறு கட்டங்களில் தவிர்த்து, விலகி, எச்சரித்து, ஒதுங்கிச் சென்றும் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகரித்ததை அடுத்து அந்தப் பெண் அதிகாரி, முதல்வரின் அலுவலகம், டிஜிபி, உள்துறைச் செயலர் உள்ளிட்டோரிடம் மேலதிகாரி மீது புகார் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகார் குறித்து விசாரிக்கக் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார். புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தப் பரிந்துரைத்தது.

இதை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது துறையிலேயே விசாகா கமிட்டி உள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதேபோல், முருகனைப் பணி மாற்றம் செய்யக் கோரி புகார் கூறிய பெண் அதிகாரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கைக் கடந்த ஜனவரி 3ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, நீதிபதி அனிதா சுமந்த் அமர்வு, இவ்வழக்கின் விசாரணையைத் தனி நீதிபதி விசாரிப்பார் என்றும் தனி நீதிபதி யார் என்று தலைமை நீதிபதி தெரிவிப்பார் என்றும் உத்தரவில் குறிப்பிட்டனர்.

அதன்படி நேற்று (பிப்ரவரி 11) இவ்வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஐஜி மீது புகார் அளித்து ஆறு மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகத் தடுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, சிபிசிஐடி போலீசில் மீண்டும் புகாரளிக்க அறிவுறுத்தினார்.

குரூப் 1 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற வழக்குகளைக் கையாள தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் போன்ற மூத்த ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் உயர் மட்டக் குழுவை ஏன் அமைக்கக் கூடாது எனத் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon