மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

யானைகள் முகாமில் சின்னதம்பி: முடிவு!

யானைகள் முகாமில் சின்னதம்பி: முடிவு!

சின்னதம்பி யானையைப் பிடித்து முகாமில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழக வனத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தமிழக வனத் துறையினரால் கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை, பொள்ளாச்சி டாப்ஸ்லிப் வனப் பகுதியில் விடப்பட்டது. கடந்த 31ஆம் தேதியன்று இந்த யானை பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி பகுதிக்குள் நுழைந்தது. அப்போது முதல் இப்போது வரை, அந்த வட்டாரத்திலுள்ள ஒவ்வோர் ஊராகப் பயணித்து வருகிறது.

கலீம், மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகளை வைத்து, சின்னதம்பி யானையை மீண்டும் வனத்துக்குள் அனுப்ப தமிழக வனத் துறை பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அவற்றுக்குப் பலன் ஏதும் இல்லை. நேற்று (பிப்ரவரி 11) மாரியப்பனுக்குப் பதிலாக சுயம்பு என்ற யானை களமிறக்கப்பட்டது. கண்ணாடிப்புதூர் கரும்புத் தோட்டத்தில் இருந்து வெளியேறினாலும், முழுவதுமாக சின்னதம்பி யானையைக் காட்டுக்குள் அழைத்துச் செல்ல வனத் துறையினரால் இயலவில்லை.

சின்னதம்பி வழக்கு

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றத் தடை கோரியும், அதைப் பிடித்து முகாமில் வைத்துப் பராமரிக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நேற்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, பத்திரிகைச் செய்திகளைப் பார்க்கும்போது சின்னதம்பி யானை கடந்த சில நாட்களாகக் காட்டு யானை போலச் செயல்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால் பயிர்களுக்குப் பாதிப்பும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார் தலைமை வனப் பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா. “யானையைக் காட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தும், அது மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. மிகவும் சாதுவாக மாறிவிட்டதால், அதைக் காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமமானது என யானைகள் நிபுணர் அஜய் தேசாஜி அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கையின்படி, சின்னதம்பி யானையைப் பிடித்து யானைகள் முகாமில் பாதுகாத்துப் பராமரிக்கும் முடிவில் இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை இன்று (பிப்ரவரி 12) மீண்டும் விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சின்னதம்பி யானையை வனப் பகுதிக்கு விரட்டுவது என்பது தாமதமாகி வருவதால், அதை யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்லும் முடிவே மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon