மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 17 நவ 2019

பெண்களின் ரகசியங்களைப் பேசும் சீரிஸ்! - கேபிள் சங்கர்

பெண்களின் ரகசியங்களைப் பேசும் சீரிஸ்!  - கேபிள் சங்கர்

2018ஆம் ஆண்டின் வெப் சீரிஸ்கள் - 4

Four More Shots Please – season 1

சிங்கிள் மதர், வக்கீல், பத்திரிகையாளர். பணக்கார வீட்டுப் பெண், ஆண்மையான ஆட்டிட்டியூட் உள்ள ஜிம் ட்ரைனர். இந்த நான்கு பெண்களும் நெருங்கிய தோழிகள். அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் இவர்கள் சந்தித்துப் பேசுமிடம் ட்ரக் பார். சிங்கிள் மதருக்குப் பிரச்சினை முன்னாள் கணவனுடன். பத்திரிகையாளருக்கோ பல பிரச்சினைகள். முக்கியமாய் உடல் சார்ந்த தேவைகளுக்காகப் பழகும் ஆண்கள். பின்பு காதல் என்ற ஒன்று வந்த பிறகான பிரச்சினை. அவரது நிறுவனத்தில் அவரால் பெரிய லாபமில்லை என்று அவரை வெளியேற்றிவிடத் தயாராய் இருக்கும் நிலைமை.

பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு ஆமாம் சாமி அப்பா. ஆட்டிட்டியூட் அம்மா. எப்படியாவது தன் பெண்ணைப் பெரிய இடத்தில் திருமணம் செய்துவைத்துவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார் அம்மா. பெண்ணுக்கோ அது பிடிக்கவில்லை. இந்த வெறுப்பில் வேறு பழக்கங்கள் வருகின்றன. வீடியோ லைவ்வில் தன் உடலை வெளிப்படுத்துகிறாள். அந்த வீடியோவை வைத்து ஒருவன் மிரட்டுகிறான். அதைப் பொது வெளியில் வைத்தும்விடுகிறான்.

ஜிம் பெண்ணுக்கு அவள் ட்ரைனிங் கொடுக்கும் நடிகையுடன் லெஸ்பியன் உறவு. காதல். பிரிவு. இத்தனைக்கும் நடுவில் அவள் குடும்பப் பிரச்சினை.

வழக்கமாய் நான்கு இளைஞர்கள், அவர்களின் குடி, காதல், காம வாழ்க்கை என்பதிலிருந்து விலகி மேட்டுக்குடிப் பெண்களின் வாழ்க்கையை அடிப்படையாய் வைத்து ஆங்கிலத்தில் நிறைய சீரிஸ்கள் வந்திருக்கின்றன. உதாரணமாய் செக்ஸ் அண்டு த சிட்டி. இந்த சீரிஸ் கிட்டத்தட்ட அந்த சீரிஸை அடியொற்றியே இருக்கிறது. கேரக்டர்களின் வடிவமைப்பில் உள்ள மாற்றங்களைத் தவிர. அமெரிக்க வாழ்க்கைக்குப் பதிலாய் மும்பை சிட்டி வாழ்க்கை.

பெண்கள் செக்ஸ் குறித்து பேசுவது சுவாரஸ்யம். அதிலும் பெண்கள் தங்கள் செக்ஸுவல் பர்வஷன் குறித்தும், ஆசைகள் குறித்தும் பேசி, விவாதிப்பதும். யாருடன் விருப்பமோ அவர்களுடனான உறவு, பொருளாதாரச் சுதந்திரம், பெண் சுதந்திரம், அவர்களிடையே ஆன நட்பு என அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை வெளிப்படுத்த விழையும் காட்சிகள் புதிதாக உள்ளன. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் சீரிஸ் அங்கேயே சுழன்றுகொண்டிருப்பது அலுப்பூட்டுகிறது. பல அமெரிக்கப் பெண் நட்புகள் தங்களின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் சீரிஸ்களின் இந்திய மொழியாக்கமாய் பல காட்சிகள் எழுதப்பட்டிருப்பதும் அந்நியமாகத் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. ஜிம் மாஸ்டர் பின்னணியைத் தவிர, மற்ற எல்லாமே மேல் தட்டு வாழ்க்கை. பழக்க வழக்கங்கள் எனக் கதை போகிறது. ஜிம் மாஸ்டரும் இவர்களுடயே பயணிப்பதாலும், அவரது காதல் ஒரு பெரிய நடிகையுடனானது என்பதால் அவருடைய கதையும் மிகவும் பணக்காரத்தனமாகவே வெளிப்படுத்தப்படுகிறது.

உறவு கொள்ளும் முறை, ஆணின் திருப்திக்குப் பிறகு பெண்ணுக்குத் திருப்தி ஏற்படுத்துவது, கணவனைப் பிரிந்தாலும் அவன் புதிய காதலியுடன் நெருக்கமாக இருப்பது குறித்த பொசசிவ் தன்மை, அவளிடம் தன் முன்னாள் கணவனின் நடவடிக்கைகள் பற்றிப் பேசும்போது ஆகும் நெருக்கம், பின்பு அதுவே அவளது மனநிலையில் குழப்பமாய் மாறுவது, நடிகை தான் ஒரு லெஸ்பியன் என்று வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் காட்சிகள், கோவாவில் நடக்கும் பார்ட்டி, நிலா வெளிச்ச செக்ஸ் காட்சிகள் என சீரிஸ் நெடுக பொங்கிப் வழியும் பெண்மை மேலோங்கும் காட்சிகள் உள்ளன.

பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரையும் நல்லவர் கெட்டவர் டெம்ப்ளேட்டை மீறி இயல்பானவர்களாய்க் காட்டிய விதம் சுவாரஸ்யம். இதுபோலப் பல சுவாரஸ்யங்கள் இக்கதையில் உண்டு. இவற்றுக்கெல்லாம் காரணம், பெண் இயக்குநரான அனு மேனன். குறிப்பிடத்தக்க நடிப்பு என்று சொன்னால் சயானி குப்தாவைச் சொல்லலாம். தன் கேரக்டரை நன்கு புரிந்துகொண்டு நடித்திருக்கிறார். இறுதிக் காட்சிகளில் பாத்திரத்தின் குழப்பங்களை மிக அழகாய் வெளிப்படுத்தியிருந்தார்.

சீரிஸ் முழுவதும் பெண்கள் குடிக்கிறார்கள்... குடிக்கிறார்கள்... குடிக்கிறார்கள். இது மாதிரியெல்லாம் காட்டுவதால் சமுதாயச் சீரழிவு ஏற்படும் என்று புலம்புகிறவர்கள் அந்தப் பக்கம் போகாதிருப்பது நலம்.

ஆங்கில சீரிஸ் பார்த்தவர்களுக்கு வழக்கமான கதையாகவும் இந்தியில் இம்மாதிரியான படங்கள் நிறைய வந்திருப்பதால் க்ளிஷேக்களின் தொகுப்பாகவும் இது சிலருக்குப் படலாம். ஆனால், சில விஷயங்களை வெள்ளித்திரையில் விவாதிக்க முடியாது என இருக்கும் நிலையில் அதையெல்லாம் பேசும் இந்த சீரிஸ் இது, சுவாரஸ்யமானதுதான்.

கதையைச் சுடுகிறவர்கள் கவனத்துக்கு!

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon