மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

மீண்டும் அவகாசம் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

மீண்டும் அவகாசம் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

வரும் 24ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் கால அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

ஜெயலலிதாவின் மரண மர்மத்தைக் கண்டறிய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுக் கடந்த ஒராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆணையத்தின் கால அவகாசம் கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், 2019 பிப்ரவரி 24ஆம் தேதி வரை நான்கு மாதங்களுக்கு ஆணையத்தின் பதவிக் காலத்தை நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கிடையே அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், சசிகலா உறவினர்கள் மற்றும் அப்போலோ மருத்துவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

விசாரணை ஏறக்குறைய நிறைவடையவுள்ள தருவாயில் இன்னும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் மட்டும்தான் விசாரிக்கப்பட வேண்டியிருக்கிறார்கள். பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டும் அரசுப் பணிகள் இருப்பதாகக் கூறி அவர் இதுவரை ஆஜராகவில்லை.

இந்த நிலையில் ஆணையத்தின் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் நேற்று (பிப்ரவரி 11) கடிதம் எழுதியுள்ளது. அதில், விசாரணை இன்னும் முடிவடையாததால் ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 10 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடையில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துவிட்ட நிலையில், இவ்வாறு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கால அவகாசம் அளிக்கும் பட்சத்தில் நான்கு முறையாக ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாகத் தடை கேட்கவில்லை என்று அப்போலோ நிர்வாகம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு மட்டுமே தடை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon