மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் - அம்பானி சந்திப்பு ரகசியம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் - அம்பானி சந்திப்பு ரகசியம்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் இருந்து சில படங்கள் வந்து விழுந்தன. டவுன்லோடு செய்தோம். திமுக தலைவர் ஸ்டாலினை ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி பிப்ரவரி 11 ஆம் தேதி சந்தித்த படங்கள்தான் அவை. தொடர்ந்து மெசேஜ் வந்து விழுந்தது.

“முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் வரும் மார்ச் 9ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. இந்தத் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஸ்டாலினை சந்தித்தார் அம்பானி என்பது வெளியே சொல்லப்பட்டாலும் இந்த சந்திப்புக்கு அதையும் தாண்டிய ஒரு பின்னணி இருக்கிறது.

இந்தியா முழுக்க உள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், மத்தியிலும் சரி... மாநிலங்களிலும் சரி தேர்தல் வரும் சமயங்களில் அவர்கள் தனிப்பட்ட முறையில் சர்வே ஒன்றை நடத்துவதையும், அந்த சர்வேயில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என சொல்லப்படுகிறதோ அந்தக் கட்சியின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதையும், தேர்தல் நிதி கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதை கார்ப்பரேட் மூளை என்று கூட சொல்லலாம். பிப்ரவரி 11 ஆம் தேதி இரவு திமுக தலைவர் ஸ்டாலினை இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானி சந்தித்ததும் கூட அப்படித்தான் என்று சொல்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் தொழிலதிபர் ரத்தன் டாடா வந்து ஸ்டாலினை சந்தித்தது நினைவில் இருக்கலாம். அந்த வரிசையில்தான் இப்போது முகேஷ் அம்பானி வந்திருக்கிறார். முகேஷ் அம்பானியின் இந்த விசிட்டை பாஜக மிக உன்னிப்பாக கவனிக்கிறது. கடந்த சில மாதங்களாகவே திமுகவின் முக்கிய பிரமுகர்களை யாரெல்லாம் சந்திக்கிறார்கள்? எதுவும் பணம் கை மாறுகிறதா என்பதை மத்திய அரசு கண்கொத்திப் பாம்பாகவே கண்காணித்து வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் எல்லோருக்குமே ஆஃப் தி ரெக்கார்டு ஆக, ‘தமிழ்நாட்டுப் பக்கம் நீங்க போறதோ, திமுகவுக்கு தேர்தல் நிதி கொடுக்கிறதோ தெரிஞ்சுதுன்னா வருமான வரித்துறை அதிகாரிகள் உங்களை தேடி வருவாங்க. பார்த்துக்கோங்க’ என மிரட்டல் போயிருக்கிறது. அதற்கு காரணம், கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல், ஒரு நாடாளுமன்ற தேர்தல் என மொத்தம் மூன்று தேர்தலில் திமுக தோல்வியைத்தான் சந்தித்து வருகிறது. கையில் இருக்கும் நிதி மொத்தமும் காலியாகி இருக்கும் என்பதால், இந்த தேர்தலை சந்திக்க நிதிப் பற்றாக்குறை இருக்கும். அதனால் யாரும் திமுகவுக்கு தேர்தல் நிதி கொடுக்க விடாமல் தடுத்தால், அதன் வெற்றியை தடுக்கலாம் என பிஜேபி கணக்குப் போடுகிறது.

இந்த சூழலில்தான் முகேஷ் அம்பானி சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். அம்பானி தன் மகள் திருமண அழைப்பிதழை ஸ்டாலினுக்குக் கொடுத்துள்ளார். அம்பானிக்கு நினைவுப் பரிசாக கலைஞர் எழுதிய தாய் காவியத்தின் ஆங்கில மொழியாக்க நூலை கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

இந்த சந்திப்பின் போது ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சில விஷயங்களை மனம் விட்டுப் பேசியிருக்கிறார். ‘மத்தியில் அடுத்த ஆட்சி அமையும்போது, உங்களது பங்களிப்பு அதிகம் இருக்கும். அதாவது திமுக நிச்சயம் ஒரு பவரான இடத்தில் இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்த 10 வருடங்களுக்கு நீங்கதான் முதல்வர். இப்போதே என்னோட வாழ்த்துக்களை தெரிவிச்சுக்குறேன்..’ என்று சொல்லியிருக்கிறார் முகேஷ் அம்பானி. ஸ்டாலின் சற்று கூச்சத்துடன் நன்றி சொல்லியிருக்கிறார்.

இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் ஸ்டாலின் வீட்டில் நினைவுகூர்ந்திருக்கிறார்கள். 2007-ம் ஆண்டில் ஒருமுறை கனிமொழியை முகேஷ் அம்பானி சந்தித்தார். அப்போது, ‘நீங்க அரசியலுக்கு வருவீங்க. எம்.பி ஆவீங்க..’ என்று சொல்லியிருக்கிறார் முகேஷ். அதைக் கேட்டு கனிமொழியே அப்போது சிரித்தாராம். காரணம், கனிமொழிக்கு அரசியலுக்கு வருவது குறித்த ஐடியா எதுவுமே இல்லாத நேரம் அது. அப்படி எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிப்பவர் முகேஷ் அம்பானி. அவர் அடுத்த 10 வருடங்களுக்கு தளபதிதான் முதல்வர் என சொல்லிட்டாரு. அவரு சொன்னால் அது கரெக்டாதான் இருக்கும்’ என சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்.

ஜனவரி 25 ஆம் தேதி இதே சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில்தான் தொழிலதிபர் ரத்தன் டாடா ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில்தான் தென் தமிழகத்தில் டாடாவுக்கு டைட்டானியம் ஆலை அமைக்க அனுமதி கொடுத்தது. அந்த ஆலைக்கு எதிராக விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் ஆதரவோடு அப்போது பல அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில் ஆலை அமைக்க ஆதரவு தெரிவித்து திமுகவும் பேரணிகளை நடத்தியது. இப்படி கலைஞர் காலத்திலேயே திமுகவுக்கு நெருக்கமான டாடாவும் ஸ்டாலினை வந்து சந்தித்துவிட்டுப் போனார்.

ஜனவரியில் டாடா, பிப்ரவரியில் அம்பானி என்று ஸ்டாலினைத் தேடி வந்து தொழிலதிபர்கள் சந்தித்துச் செல்வதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளையும், ஐ.பி அதிகாரிகளையும் அலர்ட் செய்திருக்கிறது மத்திய அரசு. ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி தரப்பில் இருந்து திமுகவுக்கு எதுவும் நிதி கை மாறுகிறதா என்பதைத் தீவிரமாக கண்காணிக்கச் சொல்லி அவர்களுக்கு உத்தரவு போயிருக்கிறது. அவர்களும் கண்காணிக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்பதுதான் அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

செவ்வாய், 12 பிப் 2019

அடுத்ததுchevronRight icon