மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

2000 ரூபாய் எதற்காக? சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

2000 ரூபாய் எதற்காக? சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

2000 ரூபாய் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் பொன்முடி, முதல்வர், துணை முதல்வர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் அறிவிப்பு வாசித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார். ஆனால், மக்களவைத் தேர்தலை முன்னிட்டே 2000 ரூபாய் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 12) பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ பொன்முடி, “60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் தேர்தலுக்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கஜா புயலால் ஆயிரக்கணக்கான ஏழைகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத் தான் ஏழை தொழிலாளர்களுக்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை. கட்சி பாகுபாடு பார்க்காமல் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த 2000 ரூபாய் உதவி கிடைக்கும்” என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து குறுக்கிட்ட பொன்முடி “பட்ஜெட் தாக்கல்செய்யப்படும் போது இந்த அறிவிப்பை வெளியிடாமல் தற்போது அறிவிப்பது ஏன்? இதன் மூலம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது நிழல் பட்ஜெட் என்பதும், முதலமைச்சர் வெளியிட்டதுதான் நிஜ பட்ஜெட் என்றும் தெரியவருகிறது” என்று குறிப்பிட்டார்.

இதற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், “110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட முதலமைச்சருக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. உழைப்பாளர்கள், தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிதி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததில் எந்த தவறும் கிடையாது. திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டதுதான் நிழல் பட்ஜெட். நாங்கள் அறிவிக்கும் பட்ஜெட் நிஜம் என்பதால் தான் ஜெயலலிதாவின் ஆட்சியை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் ” என்றார். இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon